Last Updated : 16 May, 2023 05:16 AM

 

Published : 16 May 2023 05:16 AM
Last Updated : 16 May 2023 05:16 AM

கர்நாடக முதல்வரை தேர்வு செய்வதில் இழுபறி: டெல்லியில் மூத்த தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை

படம்: பிடிஐ

பெங்களூரு / புதுடெல்லி: கர்நாடக முதல்வர் பதவியை கைப்பற்ற சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதால், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் மூத்த தலைவர்களுடன் தீவிர‌ ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கட்சி மேலிடம் டெல்லி வருமாறு விடுத்த அழைப்பின்பேரில், சித்தராமையா டெல்லி சென்றுள்ள நிலையில் டி.கே.சிவகுமார் அழைப்பை நிராகரித்துள்ளார்.

கர்நாடகாவில் மே 10-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 224 இடங்களில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜக 66, மஜத 19, சுயேச்சைகள் 4 இடங்களை பிடித்தன.

தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களைவிட கூடுதலாக இடங்களை கைப்பற்றி இருந்தாலும் அடுத்த முதல்வர் யார் என்பதில் காங்கிரஸார் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர், முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீல் இடையே போட்டி நிலவுகிறது. சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே வெளிப்படையாகவே போட்டி வெடித்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு டி.கே.சிவகுமார் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது சித்தராமையா, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட‌ காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவருக்கு கேக் ஊட்டி வாழ்த்தினர். அடுத்த முதல்வர் விவகாரத்தில் சுமுகமாக செயல்பட வேண்டும் என அவரிடம் கோரிக்கையும் விடுத்தனர்.

இந்நிலையில் டெல்லி சென்ற மல்லிகார்ஜுன கார்கே அங்கு மேலிடப் பார்வையாளர்களான சுஷில்குமார் ஷிண்டே, ஜிதேந்திரா சிங், தீபக் பாபரியா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால், கர்நாடக மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா ஆகியோருடனும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது முதல்வர், துணை முதல்வர், சாதிவாரியாக அமைச்சர் பதவி ஆகியவை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இருவருக்கும் தலா 30 மாதங்கள் முதல்வர் பதவி வழங்கலாமா? முதல்வர் பதவி வழங்காவிட்டால் கட்சிக்கு எதிராக பிரச்சினை செய்வார்களா என்றும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

வாக்கெடுப்பு தேவை

இதையடுத்து, டெல்லி வருமாறு சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு கார்கே அழைப்பு விடுத்தார். இதன்பேரில் சித்தராமையா நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஜனநாயக முறைப்படி ரகசிய வாக்கெடுப்பு நடத்தி முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும். பெரும்பாலான எம்எல்ஏக்கள் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்'' என்றார்.

வயிற்று எரிச்சல்..

டி.கே.சிவகுமார் நேற்று டெல்லி செல்லவில்லை. இதுதொடர்பாக அவர் கூறியபோது, ‘‘நான் காங்கிரஸ் மேலிடத்துக்கு விசுவாசமாக இருந்ததால் பல்வேறு இன்னலுக்கு ஆளானேன். மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறேன். எனக்கு என்ன வழங்க வேண்டும் என்பதை மேலிடம் முடிவெடுக்கட்டும். என் கையில் எதுவும் இல்லை. என்னுடைய பிறந்தநாள் என்பதால் கட்சி தொண்டர்களை சந்தித்து வருகிறேன். எனது வீட்டில் சிறப்பு பூஜையும் இருக்கிறது. எனக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லை. இன்று வயிற்று எரிச்சல் அதிகரித்திருக்கிறது. மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதனால், மேலிடம் அழைத்தும் டெல்லி செல்லவில்லை’’ என்றார்.

சோனியாவுடன் ஆலோசனை

இதனால் கார்கே நேற்று திட்டமிட்டபடி மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருடன் ஆலோசனை நடத்த முடியவில்லை. ஒருவேளை, இன்று டி.கே.சிவகுமார் டெல்லி வந்தால், அவருடன் பேச‌ திட்டமிட்டுள்ளார். சித்தராமையாவுடனும் கார்கே தனியாக ஆலோசனை நடத்த இருக்கிறார்.

இந்த சந்திப்புகளுக்கு பிறகே சோனியா மற்றும் ராகுலுடன் ஆலோசனை நடத்துவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சோனியா, ராகுலின் விருப்பம், 2024 தேர்தலுக்கான வியூகம் ஆகியவற்றின் அடிப்படையில் கார்கே விரைவில் புதிய முதல்வரை தேர்வு செய்வார் என கூறப்படுகிறது.

தாமதம் கூடாது

இந்நிலையில் காபந்து முதல்வர் பசவராஜ் பொம்மை கூறும்போது, ''கர்நாடக மக்கள் காங்கிரஸுக்கு தனிப்பெரும்பான்மை அளித்துள்ளனர். எனவே, அவர்கள் காலதாமதம் செய்யாமல் உடனடியாக புதிய அரசை அமைக்க வேண்டும். உள்கட்சி பிரச்சினையில் ஈடுபட்டு, மக்களின் நம்பிக்கையை குலைத்துவிடக் கூடாது'' என்று வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தனது பிறந்தநாளை பெங்களூருவில் நேற்று கேக் வெட்டிக் கொண்டாடினார். அப்போது, கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையாவுக்கு கேக் ஊட்டுகிறார் சிவகுமார். உடன் கட்சியின் மூத்த தலைவர்கள் ரன்தீப் சுர்ஜிவாலா உள்ளிட்டோர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x