Published : 13 May 2023 02:56 PM
Last Updated : 13 May 2023 02:56 PM

Karnataka Election Results | இந்த வெற்றி மக்களவை தேர்தலில் எதிரொலிக்காது: எடியூரப்பா நம்பிக்கை

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பெற்றிருக்கும் வெற்றி அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் எதிரொலிக்காது என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி - 135, பாஜக - 63, மஜத - 22, மற்றவை- 4 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகின்றன.

கிட்டத்தட்ட காங்கிரஸின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் கர்நாடகா மற்றும் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றி மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்காது என்று கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:

தேர்தல் முடிவுகளைக் கண்டு பாஜக தொண்டர்கள் பீதி அடைய வேண்டாம். வெற்றியும் தோல்வியும் பாஜகவுக்கு புதிது அல்ல. நாம் இதற்கு முன்பும் தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளோம். கட்சியின் பின்னடவைக்கு என்ன காரணம் என்பதை ஆராய்வோம். மக்களின் இந்த தீர்ப்பை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். பாஜக புறக்கணிக்கப்படக் கூடாது. இன்று ஒரு அரசாங்கத்தை அமைக்கும் அளவுக்கு கட்சி வளர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகள் தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தத்தை கொடுத்தாலும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம். காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றி மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்காது.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x