Published : 11 Oct 2017 10:21 AM
Last Updated : 11 Oct 2017 10:21 AM

சோனிபட் குண்டுவெடிப்பு வழக்கில் தீவிரவாதி அப்துல் கரீமுக்கு ஆயுள் தண்டனை

கடந்த 1996-ம் ஆண்டு சோனிபட் குண்டுவெடிப்பு வழக்கில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி அப்துல் கரீம் துண்டாவுக்கு நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஹரியாணா மாநிலம் சோனிபட் நகரில் கடந்த 1996 டிசம்பர் 28-ம் தேதி இரண்டு இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.

இந்த குண்டுவெடிப்பு வழக்கு சோனிபட் கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு தொடர்பாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷகீல் அகமது, டெல்லியைச் சேர்ந்த முகமது அமீர் கான் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி அப்துல் கரீம் துண்டா, சோனிபட் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டிருப்பது தெரியவந்தது.

இவ்வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் ஷகீல் அகமதுவையும், முகமது அமீர் கானையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. எனினும் தலைமறைவாக இருந்த அப்துல் கரீம் துண்டா தேடப்படும் குற்றவாளி யாக அறிவிக்கப்பட்டார். சோனிபட் குண்டுவெடிப்பு வழக்கு உட்பட அவர் மீது சுமார் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் போலீஸார் அவரை தீவிரமாக தேடியதால் தலை மறைவாக வாழ்ந்தார். உத்தர பிரதேசம் காஜியாபாத் அருகேயுள்ள பில்குவா நகரைச் சேர்ந்த அவர் ஹோமியோபதி மருத்துவர் ஆவார். பின்னர் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பில் இணைந்த அவர் வெடிகுண்டுகளை தயாரிக்கும் பயிற்சி பெற்றார். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் அவருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.

கடந்த 2013 ஆகஸ்ட் 16-ம் தேதி நேபாள எல்லையான பன்பாஸாவில் அப்துல் கரீம் துண்டாவை டெல்லி போலீஸார் கைது செய்தனர். 75 வயதாகும் அவர் தற்போது காசியாபாத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சோனிபட் நீதிமன்றத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அப்துல் கரீம் துண்டா குற்றவாளி என்று நீதிபதி சுஷில் குமார் தீர்ப்பளித்தார். அவருக்கான தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. அப்துல் கரீம் துண்டாவுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x