Published : 06 Oct 2017 09:12 AM
Last Updated : 06 Oct 2017 09:12 AM

2018 செப்டம்பரில் நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயார்: தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தகவல்

‘‘அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயாராக இருக்கிறோம்’’ என்று தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறினார்.

நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடப்பதால் அரசுக்கு பெரும் செலவு ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஒரே நேரத்தில் இரண்டுக்கும் தேர்தல் நடத்தலாம் என்று பிரதமர் மோடி கருத்துத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலில், ‘எலக்ட்டோரல் ரெஜிஸ்ட்ரேஷன் ஆபிசர்’ (இஆர்ஓ) என்ற பெயரில் இணையதள ஆப் (செயலி) ஒன்றை தேர்தல் ஆணையர் ராவத் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியதாவது:

நாடாளுமன்றத்துக்கும் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் என்ன தேவைப்படும் என்று தேர்தல் ஆணையத்திடம் மத்திய அரசு கேட்டது. அதற்கு, கூடுதலாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் வாங்க நிதி தேவைப்படுகிறது என்று கூறினோம்.

அதன்படி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாங்க ரூ.12 ஆயிரம் கோடியும், விவிபாட் இயந்திரங்கள் வாங்க ரூ.3,400 கோடியும் ஆணையத்துக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து 2 இயந்திரங்களையும் வாங்க ஏற்கெனவே தேர்தல் ஆணையம் ஆர்டர் கொடுத்துவிட்டது. 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் 40 லட்சம் விவிபாட் இயந்திரங்கள் ஆணையத்துக்கு வந்துவிடும்.

எனவே, வரும் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்துக்கும் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஆணையத்தால் முடியும். எனினும், இதுகுறித்து மத்திய அரசுதான் தேவையான சட்டத் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்.

தேர்தல் ஆணையம் புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள இஆர்ஓ ஆப் மூலம் நாடு முழுவதும் வாக்குச் சாவடியில் உள்ள தேர்தல் அதிகாரி முதல் டெல்லியில் உள்ள அதிகாரி வரை இணைப்பு ஏற்படுத்த முடியும். மேலும், வாக்காளர்கள் ஆன்லைனில் மூலமே தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்.

அதன்மூலம் போலி வாக்காளர்களை இந்த ஆப் தானாகவே அடையாளம் கண்டுபிடித்துவிடும். வாக்காளர்கள் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு செல்லும் போது, அங்கும் வாக்காளர் பெயர்களை சேர்த்து விடுகின்றனர். ஏற்கெனவே வசித்த இடத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவது இல்லை. இதனால் போலி வாக்காளர்கள் பிரச்சினை ஏற்பட்டது. இந்த பிரச்சினை தற்போது உருவாக்கி உள்ள ஆப் மூலம் நிவர்த்தி செய்யப்படும்.

இவ்வாறு ராவத் கூறினார்.

வாக்குப் பதிவின் போது மின்னணு வாக்கு இயந்திரங்களுடன், விவிபாட் இயந்திரங்கள் இணைக்கப்படும். இனிவரும் தேர்தல்களில் எல்லா வாக்குச் சாவடிகளிலும் இந்த இயந்திரம் வைக்கப்படும். இதன்மூலம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறியலாம்என்று சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்கள் நடத்த தயார் என்று உறுதிப்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x