Published : 22 Sep 2017 08:50 AM
Last Updated : 22 Sep 2017 08:50 AM

குஜராத் கலவரம் பற்றிய வீடியோ சர்ச்சை: அர்னாபுக்கு எதிராக சர்தேசாய் விமர்சனம்

ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி பொய் கூறியிருப்பதாக மூத்த செய்தியாளர் ராஜ்தீப் சர்தேசாய் விமர்சித்துள்ளார்.

கடந்த 2002 குஜராத் கலவரம் குறித்து அர்னாப் கோஸ்வாமி பேசிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் அர்னாப் கூறியபோது, “அன்றைய குஜராத் முதல்வர் மோடியின் வீட்டிலிருந்து 50 மீட்டர் தொலைவில் நானும் எனது குழுவினரும் சென்றபோது திரிசூலம் ஏந்திய ஒரு கும்பல் எங்கள் காரை வழிமறித்து தாக்கியது. நாங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கேள்வி எழுப்பினர். அப்போது செய்தியாளர் அட்டையை காண்பித்து அந்த கும்பலிடம் இருந்து தப்பித்தோம். கார் ஓட்டுநர் தனது கையில் ‘ஹே ராம்’ என்று பச்சை குத்தியிருந்ததை காட்டி தப்பினார்” என்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக அர்னாபுடன் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய சக செய்தியாளர் ராஜ்தீப் சர்தேசாய் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “எனது நண்பர் அர்னாப் குஜாரத் கலவரத்தின்போது முதல்வர் வீட்டருகே தனது கார் தாக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். உண்மை என்னவென்றால் அகமதாபாத் கலவர செய்தியை அவர் சேகரிக்கவில்லை. பொய் சொல்வதற்கும் ஓர் எல்லை உள்ளது. நான் இந்தத் துறையில் இருப்பதற்கே வருத்தப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அர்னாபுக்கு எதிராகவும் ஆதரவாகவும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் அர்னாப், பொய் கூறியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், குஜராத் கலவரம் குறித்து அர்னாப் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எனினும் ரிபப்ளிக் டிவி ஊழியர் ஒருவர், அர்னாப், சர்தேசாய் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், இந்த குழுவினர்தான் குஜராத் கலவர செய்தியை சேகரித்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் கலவரம் நடந்த நாட்களில் அர்னாப் குஜராத்தில் இல்லை. வெகு நாட்களுக்கு பிறகே அவர் செய்தி சேகரிக்க குஜராத் சென்றார் என்று சமூக வலைதள பதிவுகளில் பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x