Published : 01 May 2023 06:39 AM
Last Updated : 01 May 2023 06:39 AM

மஜத வேட்பாளரிடம் மனுவை திரும்ப பெற பேரம் பேசிய பாஜக அமைச்சர் சோமண்ணா மீது வழக்கு பதிவு செய்தது தேர்தல் ஆணையம்

பாஜக அமைச்சர் சோமண்ணா

புதுடெல்லி: கர்நாடகாவில் மஜத வேட்பாளரிடம், வேட்பு மனுவை திரும்பப் பெறுமாறு பேரம் பேசிய பாஜக அமைச்சர் சோமண்ணா மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் அமைச்சர் சோமண்ணா வருணா மற்றும் சாம்ராஜ்நகர் ஆகிய இரு தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இதில், சாம்ராஜ்நகர் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதளம் (மஜத) சார்பில் மல்லிகார்ஜுனசாமி (எ) ஆலூர் மல்லு போட்டியிடுகிறார்.

இந்நிலையில், சோமண்ணா மஜத வேட்பாளர் மல்லிகார்ஜூனசாமியுடன் செல்போனில் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியானது. அதில், வேட்பு மனுவை திரும்ப பெறுமாறு மல்லிகார்ஜுன சாமியிடம் சோமண்ணா கூறுகிறார். அவ்வாறு செய்தால் பணம் தருவதாகவும் அரசு வாகனம் தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. இதைப் பரிசீலித்த ஆணையம், சோமண்ணா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “பாஜக வேட்பாளர் சோமண்ணா மஜத வேட்பாளருக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக புகார் வந்துள்ளது. இதை மிகவும் தீவிர பிரச்சினையாக கருதுகிறோம். இதுகுறித்து இந்திய தண்டனை சட்டத்தின் 171இ (லஞ்சம்), 171எப் ஆகிய பிரிவுகளின் கீழ் சாம்ராஜ்நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்களை மிரட்டுவது அல்லது அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சிப்பதை தேர்தல் ஆணையம் பொறுத்துக் கொள்ளாது. மாநில தலைமை தேர்தல் அதிகாரியும் மாவட்ட தேர்தல் அதிகாரியும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்’’ என கூறப்பட்டுள்ளது.

இந்திய தண்டனை சட்டத்தின் 171இ மற்றும் 171எப் பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 123-வது பிரிவின்படி குறிப்பிட்ட தொகுதியின் தேர்தலை நிறுத்தி வைக்க முடியும். இதுபோல, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8(1)-வது பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட வேட்பாளர் தகுதியிழப்பு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x