Published : 29 Apr 2023 11:11 AM
Last Updated : 29 Apr 2023 11:11 AM

“நான் நிரபராதி, விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்” - இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் 

பிரிஜ் பூஷன் சரண் சிங் | கோப்புப்படம்

புதுடெல்லி: "நான் நிரபராதி.. விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்" என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் வலியுறுத்தலைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் மீது டெல்லி கனோட் ப்ளேஸ் காவல்நிலையத்தில் இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சில மணி நேரங்கள் கழித்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,"நான் நிரபராதி, எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார். விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவும் தயாராக இருக்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை நான் மதிக்கிறேன். எனக்கு நீதித்துறையின் மீது முழுமையான நம்பிக்கை இருக்கிறது.

நான் பதவி விலகுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் நான் குற்றவாளி இல்லையே. இப்போது நான் பதவி விலகினால் அவர்களின் (மல்யுத்த வீராங்கனைகளின்) குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்டது போலாகி விடும். கிட்டத்தட்ட என்னுடைய பதவிக் காலம் முடிவடையும் தருவாயில் இருக்கிறது. அரசாங்கம் 3 நபர்கள் குழுவை அமைத்திருக்கிறது. இன்னும் 45 நாட்களில் தலைவருக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் முடிந்ததும் என்னுடைய பதவிகாலம் முடிந்து விடும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை கூறி கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்தது. இந்தக் குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை வழங்கியது, எனினும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் மீது டெல்லி காவல் நிலையத்தில் வழக்கு பதிய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தினர். அந்த வழக்கினை விசாரத்த உச்ச நீதிமன்றம் பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு வலியுறுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் கூறியவர்களில் ஒருவர் சிறுமி என்பதால் போக்ஸோ பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் வெள்ளிக்கிழமை மல்யுத்த வீராங்கனைகள் அளித்தப் பேட்டியில், “நாங்கள் உச்ச நீதிமன்ற கருத்தை மதிக்கிறோம். ஆனால் எங்களுக்கு டெல்லி போலீஸ் மீது நம்பிக்கை இல்லை. இந்த போராட்டம் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல. குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்” என்று தெரிவித்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x