

குடியரசுத் தலைவர் ஜூன் 5-ல் தமிழகம் வருகை: முதல்வர் ஸ்டாலினின் அழைப்பை ஏற்று, சென்னை - கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க ஜூன் மாதம் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்க இருக்கிறார். முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து, சென்னை - கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறந்து வைத்திடவும் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.
விடுமுறைக்குப் பின் ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு: 2023 - 2024 ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித் துறையின் நாட்காட்டியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெள்ளிக்கிழமை சென்னையில் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் அளித்த பேட்டியில்," கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும்" என்று தெரிவித்தார்.
கோடை காலத்தை முன்னிட்டு பழங்கள், குடிநீர் ஆய்வு: கோடை காலத்தை முன்னிட்டு பழங்கள் மற்றும் குடிநீரை ஆய்வு செய்ய அறிவுறுத்தி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடை காலமாக இருக்கின்ற சூழ்நிலையில் வியாபாரிகளால் ரசாயனப் பவுடர்கள் போன்ற பல்வேறு தேவையற்ற மாதிரிகள் மூலம் பழங்களை பழுக்க வைக்கப்படுகிறதா என்பதையும், அதே போல் குடிநீர் மாதிரிகள் எடுத்து தரம் உள்ள வகையில் குடிநீர் தயாரிக்கப்படுகிறதா தரமான குடிநீர் பாட்டிலில் அடைத்து விற்கிறார்களா என்பதையும் கண்காணிக்க அறிவுறுத்தியிருப்பதாக கூறியுள்ளார்.
30 மாத ஊதிய பாக்கியால் பினாயில் குடித்த ஊழியர்கள்: புதுச்சேரியில் 30 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து அமுதசுரபி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 1 மாதமாக போராட்டம் நடத்தியும் அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து காந்திவீதியிலுள்ள அமுதசுரபி தலைமை அலுவலக வாயிலில் அமர்ந்து வெள்ளிக்கிழமையன்று போராட்டம் நடத்தினர். அப்போது விஷம் அருந்துவதாக, தெரிவித்த ஊழியர்கள் பினாயில் மற்றும் கிருமி நாசினியை குடித்தனர். இதில் பாதிக்கப்பட்ட 4 பேர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
“திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை”: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் பிபிஜி சங்கர். தமிழக பாஜக பட்டியலின அணி மாநிலப் பொருளாளராகவும் இருந்த சங்கர் வியாழக்கிழமை இரவு சென்னை பூந்தமல்லி அருகே மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை குறித்து ஆவடி காவல் ஆணையரக இணை ஆணையர் விஜயகுமார் தலைமையில், 9 தனிப் படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதனிடையில் இந்த கொலை குறித்து,"காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வரோ சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனில்லாமல், நம்பர் 1 முதல்வர் என்று நாளொரு நாடகம் போட்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தம்: தலைவர்கள் கண்டனம்: “கர்நாடக மாநிலம் சிவமோகாவில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற தமிழ் வாக்காளர்கள் மாநாட்டின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது, அதை அம்மாநில பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான ஈஸ்வரப்பா குறுக்கிட்டு பாதியில் நிறுத்தச் செய்ததுடன், அதற்கு மாற்றாக கன்னட மொழி வாழ்த்தை இசைக்கச் செய்திருக்கிறார். அவரது அப்பட்டமான மொழிவெறி கண்டிக்கத்தக்கது. தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்திய விழா அமைப்பாளர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
"எந்த மெட்டில் பாடினாலும் பாடப்படுவது தமிழ் தாய் வாழ்த்து என அண்ணாமலைக்கு தெரியாதா? தமிழ் தாய் வாழ்த்தை அவமதித்த பாஜக, தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கர்நாடகா தேர்தல்: பாஜக - காங். வார்த்தை போர்: கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், அங்கு பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. கட்சிகளுக்கு இடையேயான வார்த்தைப் போர்களும் வலுத்துவருகின்றன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை ‘விஷப்பாம்பு’ என விமர்சித்தார். இதற்கு பதிலடி தரும் விதமாக கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை ‘விஷப் பெண்’என்றும், பாகிஸ்தான், சீன உளவாளி என்றும் விமர்ச்சித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
இதனிடையில் நாவல்குண்டு தொகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பிரதமர் நரேந்திர மோடியை உலகம் பாராட்டுகிறது; மதிக்கிறது. ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி போன்றவர்கள் அவரை அவமதித்து வருகிறார்கள். நமது பிரதமரை, விஷப் பாம்பு என்று மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். நரேந்திர மோடியை திட்ட திட்ட அவர் ஒளிர்வார் என்பது காங்கிரஸ் தலைவர்களுக்குத் தெரியவில்லை. பிரதமர் மோடியை பழிப்பதன் மூலம் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற்றுவிட முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
“கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அமைவது உறுதி”: ராகுல்: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கலபுர்கியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர்,"கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. இதனை யாராலும் தடுக்க முடியாது. பாஜகவுக்கு விருப்பமான எண் 40. அதனால் அந்த கட்சிக்கு இந்த தேர்தலில் 40 தொகுதிகளில்தான் வெற்றி கிடைக்கும். கர்நாடக மக்கள் 40 தொகுதிகளை மட்டும்தான் பாஜகவுக்குக் கொடுப்பார்கள். காங்கிரஸ் கட்சி குறைந்தது 150 தொகுதிகளில் வெற்றி பெறும்" என்று தெரிவித்தார். 9.
என்கவுன்ட்டர் விவகாரம்: உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி: அத்தீக் அகமது கொலை உட்பட உத்தரப் பிரதேசத்தில் என்கவுன்ட்டர்கள் தொடர்பாக வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அம்மாநிலத்தில் நடந்த 183 என்கவுன்ட்டர்கள் தொடர்பாக மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியது. மேலும் ரவுடி அத்தீக் அகமது கொலை தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
“இந்திய - சீன எல்லை நிலைமை நிலையாகவே உள்ளது”: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் லீ ஷங்ஃபு டெல்லி வந்துள்ளார். அவருடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் வியாழக்கிழமை 45 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சீனா எல்லை ஒப்பந்தங்களை மீறுவதால் இருதரப்பு உறவுகளின் முழு அடிப்படையும் பாதிக்கப்படுவதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து சீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சீனா - இந்தியா எல்லையில் நிலைமை தற்போது பொதுவாக நிலையானதாக உள்ளது. இரு தரப்பும் ராணுவ மற்றும் தூதரக வழிகள் மூலம் தொடர்பை பேணி வருகின்றன" என்று லீ ஷங்ஃபு குறிப்பிட்டுள்ளார்.