

சென்னை: கோடை காலத்தை முன்னிட்டு பழங்கள் மற்றும் குடிநீரை ஆய்வு செய்ய அறிவுறுத்தி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"உணவுப் பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை தமிழக அரசு தொடர்ச்சியாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறைய விருதுகளைப் பெற்று வருகிறது.
முதல்வரின் வழிகாட்டுதலின்படி, உணவுப் பாதுகாப்புத் துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கின்ற நிலையில் கோடை காலமாக இருக்கின்ற சூழ்நிலையில் வியாபாரிகள் ரசாயனப் பவுடர்கள் போன்ற பல்வேறு தேவையற்ற மாதிரிகள் மூலம் பழங்களை பழுக்க வைப்பதற்குரிய பணியினை செய்கிறார்கள்.
குறிப்பாக மாம்பழங்கள், வாழைப்பழங்கள், தர்பூசணி போன்ற பழங்களை பழுக்க வைப்பதற்கு ரசாயனக் கலவைகளைப் பயன்படுத்துகிறார்கள். அதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் குடிநீர் மாதிரிகள் எடுத்து தரம் உள்ள வகையில் குடிநீர் தயாரிக்கப்படுகிறதா தரமான குடிநீர் பாட்டிலில் அடைத்து விற்கிறார்களா என்பதை கண்காணிக்க அறிவுறுத்தியிருக்கிறோம்.
கோடை காலம் என்பதால் போலியான குளிர்பானங்கள் பாட்டிலில் அடைத்து விற்பது என்பது காலங்காலமாக ஒரு சிலர் செய்து வருகின்றனர். அதையும் முறையாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறோம்.
உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து தமிழக உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே மாவட்ட அலுவலர்கள் தங்களுடைய மாவட்டத்தில் அனைத்து கடைகளையும் ஆய்வு செய்து இத்தகைய போதை வஸ்துக்கள் விற்பனை செய்யாமல் இருக்க சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறோம்." இவ்வாறு அமைச்சர் கூறினார்.