காஞ்சிபுரம் பாஜக பிரமுகர் படுகொலை: 9 தனிப் படைகள் விசாரணை

கொலை செய்யப்பட்ட வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் பி.பி.ஜி.சங்கர்
கொலை செய்யப்பட்ட வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் பி.பி.ஜி.சங்கர்
Updated on
1 min read

காஞ்சிபுரம்: வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவரும், பாஜக பட்டியலினப் பிரிவின் மாநிலப் பொருளாளருமான பிபிஜி சங்கரை கொலை செய்த குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் 9 தனிப் படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பிபிஜி சங்கர். இவர் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலியனப் பிரிவு மாநிலப் பொருளாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு சென்னை கொளத்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு பிபிஜி சங்கர் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பூந்தமல்லி அருகே சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சங்கரின் காரை பின்தொடர்ந்து வந்த, மர்ம நபர்கள் அவரது காரில் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.

இதையடுத்து காரில் இருந்து இறங்கிய அவர் தப்பி ஓடியுள்ளார். அவரை துரத்திச் சென்ற மர்ம நபர்கள் அவரை வெட்டிக் கொலை செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இந்தக் கொலை குறித்து ஆவடி காவல் ஆணையரக இணை ஆணையர் விஜயகுமார் தலைமையில், 9 தனிப் படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட சங்கரின் தொலைபேசி இணைப்புகள், சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட தொலைபேசி உரையாடல்கள், சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றைக் கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சேகரித்த தடயங்களின் அடிப்படையிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in