Published : 27 Apr 2023 10:15 PM
Last Updated : 27 Apr 2023 10:15 PM

“எல்லையில் அமைதி நிலவினால் மட்டுமே நல்லுறவு” - சீன பாதுகாப்பு அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

டெல்லி: ஷாங்காய் கூட்டமைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்ஃபூ புதுதில்லியில் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் இந்தியா - சீன எல்லை விவகாரம் குறித்தும் இரு தரப்பு நல்லுறவுக்கான மேம்பாடு குறித்தும் வெளிப்படையாக விவாதித்தனர்.

இந்த சந்திப்பின் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "எல்லையில் அமைதி மற்றும் சமாதானத்திற்கு வித்திடுவதன் மூலமே இந்தியா - சீனா இடையேயான நல்லுறவை மேம்படுத்த முடியும். எல்லை கட்டுப்பாட்டுக் கோடு சார்ந்த அனைத்து விவகாரங்களுக்கும், தற்போது அமலில் உள்ள இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் நிலைப்பாட்டிற்கு ஏற்ற வகையில் தீர்வு காண்பது அவசியம் . அமலில் உள்ள ஒப்பந்தத்தை மீறுவது இரு தரப்பு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போதுள்ள ஒப்பந்தங்களை மீறுவது இருதரப்பு உறவுகளின் முழு அடிப்படையையும் சிதைத்துவிட்டது.

எல்லையில் அமைதியும் அமைதியும் நிலைநாட்டப்பட்டால்தான் இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு முன்னேற முடியும். அவ்வாறு செய்வதன் மூலம் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க முடியும் என்றும் பேச்சுவார்த்தையின்போது குறிப்பிட்டார்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அமைச்சர் சந்திப்பு: முன்னதாக, ராஜ்நாத் சிங்கை, ஈரான் பாதுகாப்பு அமைச்சர் முகமது ரேஸா கரே அஷ்தியானி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இந்தியா - ஈரான் இடையேயான தொன்மை வாய்ந்த கலாச்சாரம், நாகரிகம், மொழி அடிப்படையிலான உறவுகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையேயான நட்புறவு குறித்து இரு தலைவர்களும் விவாதத்தினர்.

அதேபோல், ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை, அங்கு அமைதியை ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புகள், எல்லைப் பாதுகாப்பு விவகாரம் ஆகியவை குறித்து இரு தலைவர்களும் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டதுடன், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான நடவடிக்கைகளை மேம்படுத்திக் கொள்வது பற்றியும் ஆலோசித்தனர்.

கஜகஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான்: கஜகஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கர்னல் ஜெனரல் ரஸ்லன் சசைலைக்கோவ் மற்றும் தஜிகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கர்னல் ஜெனரல் ஷெரலி மிர்சோவையும் தனித்தனியே சந்தித்து ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புகளின்போது இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு, பரஸ்பரம் இருதரப்பு நலன் சார்ந்த கூட்டாண்மையை விரிவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்தியா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் இந்தியா வந்துள்ளனர்.

மற்ற நாடுகளின் வருகையைவிட சீன பாதுகாப்பு அமைச்சரின் இந்திய வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனென்றால், 2020 ஏப்ரலில் கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு சீனா இராணுவத்தின் உயர்மட்ட தலைவராக அறியப்படுகிற பாதுகாப்பு அமைச்சர் இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x