Published : 26 Apr 2023 11:01 PM
Last Updated : 26 Apr 2023 11:01 PM

தமிழகத்தில் 11 உள்பட நாடு முழுவதும் 157 புதிய செவிலியர் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: நாடு முழுவதும் தற்போது உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு அருகிலேயே ரூ.1,570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை ஏற்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாட்டில் செவிலியர் பணியை வலுப்படுத்தும் வகையில், கடந்த 2014ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு அருகிலேயே ரூ.1,570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை ஏற்படுத்துவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் ஆண்டுதோறும் கூடுதலாக சுமார் 15,700 செவிலியர் பட்டதாரிகள் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 இடங்களில் புதிய செவிலியர் கல்லூரிகள் அமையவுள்ளன.

அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் செவிலியர் கல்வியில் தரம், நியாயமான கல்வி கட்டணம் ஆகியவற்றை உறுதி செய்யும். செவிலியர் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக்கல்வி செயலாளர் ஆகியோர் இதற்கான பணிகளை கண்காணிக்கவுள்ளனர்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கருவிகள் துறைக்கான கொள்கைக்கும் ஒப்புதல்: இதனிடையே, மருத்துவக் கருவிகள் துறைக்கான கொள்கை 2023-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் மருத்துவக் கருவிகள் துறை சுகாதாரத்துறையின் அத்தியாவசியமான ஒருங்கிணைந்த அமைப்பாக விளங்குகிறது. கோவிட்-19 பெருந்தொற்றின் போது சுவாசக்கருவிகள், பிபிஇ உடைகள், என்-95 முகக்கவசங்கள் போன்றவற்றின் தயாரிப்புக்கு இந்தத் துறை மிகப்பெரும் பங்களிப்பை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மருத்துவக் கருவிகள் துறைக்கான கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் பொதுசுகாதார நோக்கங்களான எளிதில் கிடைத்தல், குறைந்த செலவில் தரமானதாக கிடைத்தல், புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றை எதிர்கொள்ள முடியும். சீரான வளர்ச்சிக்கும் இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு முதலீடுகளை ஊக்குவித்து, மருத்துவக் கருவிகள் உற்பத்தியை மேற்கொள்வது மத்திய அரசின் தற்சார்பு இந்தியா, இந்தியாவில் உற்பத்தி ஆகியவற்றுக்கு உத்வேகம் அளிக்கும்.

நோயாளிகளை மையப்படுத்திய அணுகுமுறையை துரிதப்படுத்துவதோடு, உலகளாவிய சந்தையில் மருத்துவக் கருவிகள் உற்பத்தி மற்றும் புதிய கண்டுபிடிப்பில் இந்தியாவின் பங்கினை அடுத்த 25 ஆண்டுகளில் 10 முதல் 12 சதவீதம் வரை அதிகரிக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவக் கருவிகள் துறையின் தற்போதுள்ள 11 பில்லியன் டாலர் என்பதிலிருந்து 50 பில்லியன் டாலர் வளர்ச்சிக்கு இந்தக் கொள்கை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x