12 மணி நேர வேலை சட்ட மசோதா நிறுத்திவைப்பு முதல் ஆபரேஷன் காவேரி வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஏப்.24, 2023

12 மணி நேர வேலை சட்ட மசோதா நிறுத்திவைப்பு முதல் ஆபரேஷன் காவேரி வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஏப்.24, 2023
Updated on
3 min read

திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானத்துக்கு அனுமதி: தமிழகத்தில் திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அரசு அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் நடைபெறும் நிகழ்ச்சி என்றாலும் மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற்று மதுவிலக்கு துணை ஆணையர்கள் சிறப்பு அனுமதியை வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அரசிதழில் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மதுபானக் கூடத்தில் மட்டுமே இதுநாள் வரை மதுபானங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசு இதனை அறிவித்துள்ளது.

“சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் மட்டுமே அனுமதி”: “திருமண நிகழ்வு உட்பட எந்தவொரு நிகழ்வுக்கும் ஒருபோதும் தமிழ்நாடு அரசு மதுபானம் பரிமாற அனுமதியை வழங்காது. கிரிக்கெட் போன்ற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் பிற சர்வதேச நிகழ்வுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் இருப்பது போல அனுமதி வழங்கப்படும். இது கோரிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட அனுமதி” என்று செய்தியாளர்களிடம் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

"திருமண மண்டபங்களில் மதுவிற்பனை என்று அறிவித்துவிட்டு, தற்போது எதிர்ப்பு ஏற்பட்டவுடன் அமைச்சர் ஒருவர் அதனை மறுப்பது திமுகவின் வழக்கமான ஏமாற்று தந்திரமே அன்றி வேறில்லை" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

“மக்கள் விரோத செயலுக்கு பாடம் புகட்டப்படும்” - இபிஎஸ் சாடல்: "திருமண மண்டபங்கள், விளையாட்டுத் திடல்களில், மதுபானம் அருந்த அனுமதியளித்து, பொது அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரிக்கும் இத்தகைய மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்த அரசுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர் என்பது மட்டும் உறுதி" என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

“திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் மற்றும் வீடுகளில் மது பரிமாற அனுமதிக்கும் அரசாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெறாவிட்டால், அந்த அரசாணை திரும்பப் பெறப்படும் வரை மக்களைத் திரட்டி மிகக் கடுமையான பல கட்ட போராட்டங்களை எனது தலைமையில் பா.ம.க. முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

“மது ஆலைகளை மூடுவோம் என்று ஆட்சிக்கு வந்த அரசு, வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் உள்ளது” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.


12 மணி நேர வேலை சட்டமசோதா நிறுத்திவைப்பு: "சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், '2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு' என்ற சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை செய்ய வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் குழு திங்கள்கிழமை (ஏப்.24) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் பல்வேறு துறைச் செயலாளர்கள் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். மேலும், தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் 12 மணி நேர வேலை மசோதாவுக்கு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்நிலையில் மசோதாவை நிறுத்திவைப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

பாஜகவின் கோரிக்கையை ஏற்று அதிமுக வேட்பாளர் வாபஸ்: பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று, கர்நாடக மாநிலம் புலிகேசிநகர் தொகுதி அதிமுக வேட்பாளரின் வேட்புமனுவை திரும்பப்பெறுவதாக அக்கட்சியின் தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.


“கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்படும் நிலை மாற்றப்பட்டுள்ளது”: பஞ்சாயத்து ராஜ் தினத்ததை முன்னிட்டு மத்தியப் பிரதேசத்தின் ரேவா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது, ''2014க்கு முன் இருந்த ஆட்சியாளர்கள் கிராமப்புற வளர்ச்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்பட்டு வந்தன. ஆனால், 2014க்குப் பிறகு கிராமப்புறங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

முந்தைய அரசுகள் கிராமப்புறங்களுக்குச் செலவிடுவதை தவிர்த்தன. இதன் காரணமாக கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்பட்டன. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கிராமப்புறங்களில் வளர்ச்சித் திட்டங்கள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2014க்கு முந்தைய 10 ஆண்டுகளில் மத்திய அரசின் நிதி உதவியின் கீழ் 6 ஆயிரம் பஞ்சாயத்து அலுவலகங்கள் மட்டுமே கட்டப்பட்டன. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் 30 ஆயிரம் பஞ்சாயத்து அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன" என்றார்.

“பாஜக பூஜ்யமாக வேண்டும்” - மம்தா உறுதி: "எனக்கு எந்த ஈகோவும் இல்லை; பாஜக பூஜ்யமாக வேண்டும். அதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்" என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் திங்கள்கிழமை சந்தித்தனர். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, "பாஜகவை எதிர்க்கும் மெகா கூட்டணிக்கான கட்சிகள் ஒருங்கிணைப்பில் எனக்கு எவ்வித ஈகோவும் இல்லை.வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மக்களுக்கும் பாஜகவுக்கும் எதிரானதாக மட்டுமே இருக்கப் போகிறது. நான் ஏற்கெனவே சொல்லியதுபோல் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் தேர்தல் போருக்காக ஒன்றிணைவதில் எந்த எதிர்ப்பும் இல்லை.

நிதிஷ் குமாரிடம் நான் ஒரே ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளேன். ஜெயப்பிரகாஷ் நாராயணன் இயக்கம் பிஹாரில் இருந்துதான் ஆரம்பித்தது. அதனால் நாம் பிஹாரில் ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைப் பற்றி அங்கே முடிவு செய்ய வேண்டும். அதற்கும் முன்னதாக நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்ற செய்தியை வலிமையாகக் கடத்த வேண்டும். எனக்கு பாஜகவை ஜீரோவாக்க வேண்டும். அவர்கள் இப்போது ஊடக துணையோடு பெரிய ஹீரோவாக உலாவருகிறார்கள்" என்றார்


தாயகம் திரும்ப சூடான் துறைமுகம் வந்த 500 இந்தியர்கள்: சூடானில் இருந்து இந்தியர்களை மீட்கும் 'ஆபரேஷன் காவேரி' திட்டம் செயல்படத் தொடங்கி உள்ளது. சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இது தொடர்பாக கடந்த 21 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான 'ஆபரேஷன் காவேரி' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 500 இந்தியர்கள் சூடான் துறைமுகத்துக்கு வந்துள்ளனர். மேலும், பலர் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை தாயகம் அழைத்து வருவதற்காக நமது கப்பல்களும் விமானங்களும் தயார் நிலையில் உள்ளன. சூடானில் உள்ள நமது சகோதரர்கள் அனைவருக்கும் உதவ உறுதி பூண்டுள்ளோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

தோனியை புகழ்ந்த ஜெயக்குமார்: தோனி என்ற ஒற்றைப் பெயரே இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்களை கிரிக்கெட் பார்க்க வைக்கிறது' என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்த ட்வீட் செய்துள்ள அவர், “சச்சின் அவுட் ஆன பிறகு டிவியை ஆப் செய்த ஒட்டுமொத்த இந்தியாவையும் இறுதிவரை மேட்ச் பார்க்க செய்த இளைஞன் (இன்றும்). தோனி என்ற ஒற்றைப் பெயரே இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்களை கிரிக்கெட் பார்க்க வைக்கிறது. உன் ஓய்வறிந்து நீ குவித்த கோப்பைகளும் கண்ணீர் வடிக்கும்!” எனத் தெரிவித்துள்ளார்.


பாதிரியாரின் விபரீத யோசனையால் பறிபோன உயிர்கள்: கென்யாவில் உணவு உண்ணாமல் இருந்தால் சொர்க்கத்துக்கு செல்லலாம் என்று கூறிய பாதிரியாரின் ஆலோசனையால் 47 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த போலீசாரின் விசாரணையில், உணவினை தவிர்த்து விரதமிருந்தால் சொர்க்கத்துக்கு செல்முடியும் என்ற கருத்தை மலிந்தி பகுதி மக்களுக்கு பாதிரியார் பால் மெக்கன்சி என்பவர் வழங்கி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து பாதிரியாரின் ஆலோசனையை கேட்டு மக்கள் உணவருந்தாமல் இருந்து வந்துள்ளனர். இதில் நான்கு பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in