“திருமண மண்டபங்கள், விளையாட்டுத் திடல்களில் மது அருந்த அனுமதிப்பது மக்கள் விரோதம்” - இபிஎஸ் சாடல்  

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்
எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "திருமண மண்டபங்கள், விளையாட்டுத் திடல்களில், மதுபானம் அருந்த அனுமதியளித்து, பொது அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரிக்கும் இத்தகைய மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்த அரசுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர் என்பது மட்டும் உறுதி" என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மதுவிலக்கே ஒற்றை இலக்கு என கூறிவிட்டு 12 மணிநேரம் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கும் இந்த திமுக அரசு, இன்று கல்யாண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும், மதுபானம் அருந்தலாம் என அனுமதித்திருப்பதற்கு எனது கடும் கண்டனங்கள்.

மதுவுக்கு அடிமையாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து, கலாச்சாரத்தின் மீது திராவகத்தை வீசியுள்ள இந்த திராவக மாடல் அரசு, பொது அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரிக்கும் இத்தகைய மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்த அரசுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர் என்பது மட்டும் உறுதி" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அனுமதி வழங்கப்படுவதாகவும், அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் எனவும் அரசிதழில் தெரிவிக்கப்பட்டிருந்த தகவல் வெளியானது.

மதுபானம் பரிமாற ஆண்டு மற்றும் நாள் அடிப்படையிலான அனுமதிக்கான கட்டணமும் வெளியிடப்பட்டது. மாவாட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று மதுவிலக்கு துணை ஆணையர்கள் சிறப்பு அனுமதியை வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அரசிதழில் தெரிவித்துள்ளது. பேரூராட்சி, ஊராட்சி, மாநகராட்சி என இதற்கான அனுமதி கட்டணங்கள் மாறுபடுகின்றன. நாள் ஒன்றுக்கு நகராட்சி என்றால் ரூ.11,000. பேரூராட்சி என்றால் ரூ.7,500. மற்ற இடங்கள் என்றால் ரூ.5,000 என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அரசாணைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in