Published : 22 Apr 2023 01:51 PM
Last Updated : 22 Apr 2023 01:51 PM

கர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை ஏற்படாது: மல்லிகார்ஜூன கார்கே

மல்லிகார்ஜூன கார்கே | கோப்புப் படம்.

புதுடெல்லி: கர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை ஏற்பட வாய்ப்பில்லை என்றும், காங்கிரஸ் நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்றும் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

தி இந்து ஆங்கில நாளிதழுக்கு மல்லிகார்ஜூன கார்கே அளித்துள்ள நேர்காணல்:

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவது காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு முக்கியம்?

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது நாட்டிற்கு நல்லது. ஏனெனில், நாடு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. ஜனநாயக வழிமுறைகள் மீறப்படுகின்றன. அரசியல் சாசனம் புறக்கணிக்கப்படுகிறது. சுதந்திரமான அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. கர்நாடகத்தைப் பொறுத்தவரை, இங்கு சட்டம் ஒழுங்கு இல்லை. மத்தியிலும், கர்நாடக மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள கட்சி, சட்டங்களை மதிப்பதே இல்லை. இதன் காரணமாகவே இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டியது முக்கியமாகிறது.

காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் பாஜகவையும் ஆர்எஸ்எஸ் அமைப்பையும் கடுமையாக எதிர்க்கும் நிலையில், ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட கர்நாடக முன்னாள் முதல்வரான ஜெகதீஷ் ஷெட்டரை எவ்வாறு கட்சியில் இணைத்தீர்கள்?

இது ஒரு தனி விவகாரம். ராகுல் காந்தியும் நானும் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பை எதிர்க்கிறோம். அதேநேரத்தில், ஒரு தலைவர் காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்பதாகவும், அதன் கொள்கையை ஏற்பதாகவும் கூறும்போது, அதை கருத்தில் கொண்டும் கட்சியின் நலன் கருதியும் கட்சி முடிவெடுக்கிறது.

கர்நாடகாவில் இம்முறை தொங்கு சட்டப்பேரவை ஏற்படலாம் என்றும், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவைக் கோரலாம் என்றும் செய்திகள் வெளியாகின்றனவே?

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சி அமைப்பது உறுதி. நாங்கள் யாரையும் சார்ந்து இல்லை. நாங்கள் எடுத்த கருத்துக் கணிப்புகள், இம்முறை காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. தொங்கு சட்டப்பேரவை ஏற்படும் என்று நான் நம்பவில்லை.

ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர் அஷோக் கெலாட்டுக்கும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலை எவ்வாறு சரி செய்யப்போகிறீர்கள்?

காங்கிரஸ் கட்சி எந்த ஒரு தனிநபரையும் சார்ந்து இயங்கக்கூடியது அல்ல. கட்சி என்பது ஒரு அமைப்பு. இதில் சிலர் வருவார்கள், சிலர் செல்வார்கள். எனது கட்சியில் நான் 3-4 பிளவுகளைப் பார்த்திருக்கிறேன். எவர் ஒருவரும் கட்சியைவிட தான் பெரியவர் என எண்ணக்கூடாது. நான் அதை ஏற்க மாட்டேன். ஏனெனில், எந்த ஒரு தனிநபரையும்விட கட்சி மேலானது.

காங்கிரஸ் தலைமையை ஏற்க திரிணாமூல் காங்கிரஸ், பாரத் ராஷ்ட்ரிய சமிதி, சமாஜ்வாதி கட்சி ஆகியவை மறுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளுக்கான தலைமை இடத்தை காங்கிரஸ் விட்டுக்கொடுக்குமா?

காங்கிரஸ் கட்சி தலைமையேற்று எதிர்க்கட்சிகளை வழிநடத்தும் என்று நாங்கள் எங்கேயும் கூறவில்லை. பாஜகவை தோற்கடிப்பதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம். இதே உணர்வோடு இருப்பவர்களை நாங்கள் வரவேற்கிறோம். அரசியல் சாசனத்தைக் காப்பதற்கு ஏற்ப எம்.பி.,க்கள் தேவை. அதற்காகவே ஒத்த கருத்துள்ள கட்சிகளை ஆதரிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். வர விரும்பாதவர்கள் செல்லட்டும். அவர்களின் செயல்பாடுகளை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவாரா?

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே முதல் முக்கியம். எங்களால் நேரடியாக அணுக முடியாதவர்களை வேறு சிலரின் மூலம் அணுகுகிறோம். பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதற்கான வாய்ப்பு குறித்து பிறகு முடிவு செய்வோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x