Published : 17 Apr 2023 04:48 AM
Last Updated : 17 Apr 2023 04:48 AM

இந்தியாவின் மருந்து தர விதிமுறைகள் சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும் - நிதி ஆயோக் பரிந்துரை

புதுடெல்லி: மருந்து தயாரிப்பு தொடர்பாக இந்தியாவின் தர விதிமுறைகள் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படும் விதிகளுக்கு நிகரானதாக இருக்க வேண்டும் என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. மேலும், மருத்துவ உபகரணங்கள் தொடர்பான கண்காணிப்புக்கு தனி ஆணையத்தை உருவாக்கவும் நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.

‘புதிய மருந்துகள், மருத்துவ சாதனங்கள், அழகு சாதனப் பொருட்கள் மசோதா 2023’ தொடர்பான கலந்தாலோசனையை மத்திய அரசு நடத்தி வருகிறது. இதில் கலந்துகொண்ட நிதி ஆயோக் தனது பரிந்துரையை முன்வைத்துள்ளது.

தற்போதைய மசோதா, இந்தியாவின் மருந்து தரக் கட்டுபாடுகளை சர்வதேச தரத்திலானதாக மாற்றுவதாக இருக்க வேண்டும். இந்தியாவின் மருந்து தரக் கட்டுப்பாடு சர்வதேச தரத்தில் மாறும்போது, இந்தியாவின் மருந்து ஏற்றுமதி அதிகரிக்கும்.

மேலும், உள்நாட்டிலும் வெளிநாடுகளுக்கும் விநியோகம் செய்யப்படும் இந்திய மருந்துகளின் தரம் உறுதி செய்யப்படும். காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளில் நிகழ்ந்தது போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்படும் என்று நிதி ஆயோக் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருமல் மருந்தால் சிக்கல்: கடந்த ஆண்டு இந்திய இருமல் மருந்தை குடித்ததால் காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் குழந்தைகள் உயிரிழந்தனர். இது இந்திய மருந்து மீதான நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கியது. இந்நிலையில், இந்தியாவின் மருந்து தரக் கட்டுப்பாடு சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும் என்று நிதி ஆயோக் வலியுறுத்தியுள்ளது.

தற்போது மருந்து மற்றும் அழகு பொருட்கள் தயாரிப்பதற்கான உரிமத்தை அந்த மாநில அரசுகள் வழங்குகின்றன. இனி, இந்த உரிமம் வழங்கும் அதிகாரம் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு வசம் மட்டுமே இருக்கும் என்று புதிய மசோதாவில் மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இந்த மாற்றம், இந்திய மருந்து தயாரிப்பில் ஒரே மாதிரியான விதிகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யும் என்று நிதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x