Published : 11 Sep 2017 09:37 AM
Last Updated : 11 Sep 2017 09:37 AM

தகுதியானவர்களுக்கே சாமியார் பட்டம்; சாதுக்கள் கூட்டமைப்பு அறிவிப்பு: குர்மீத் ராம் ரஹீ்ம் விவகாரத்தால் முடிவு

சர்ச்சை சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு பாலியல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இனி தகுதியானவர் களுக்கே சாமியார் பட்டம் வழங்கப்படும் என்று அகில பாரதிய அகாரா பரிஷத் என்ற சாதுக்கள் அமைப்பு அறிவித்துள்ளது.

ஹரியாணா மாநிலம் சிர்சா நகரில் தேரா சச்சா சவுதா என்ற ஆன்மீக அமைப்பின் தலைவராக இருந்த சர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 2 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. குர்மீத் குற்ற வாளி என்ற அறிவிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட வன்முறையில் 30 பேர் பலியாயினர்.

இந்நிலையில், ராமஜென்ம பூமி இயக்கத்தில் முக்கிய பங்காற்றும் நிர்மோகி அகாரா எனப்படும் சாதுக்கள் சங்கம் உட்பட 14 அகாராக்களைக் கொண்ட ‘அகில பாரதிய அகாரா பரிஷத்’ என்ற சாதுக்கள் கூட்டமைப்பு, இனி தகுதியானவர்களுக்கு மட்டுமே சாமியார் பட்டம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து விஸ்வ இந்து பரிஷத்தின் இணை செயலாளர் சுரேந்திர ஜெயின் நேற்று டெல்லியில் கூறியதாவது:

மதத் தலைவர்கள் யாரோ ஓரிருவர் செய்யும் தவறு ஒட்டுமொத்தமாக சாமியார்கள் பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இது சாமியார்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. சாமியார் என்ற பெயரை முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்க சாதுக்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது.

துறவறம் மேற்கொள்ளும் ஒருவரின் நடவடிக்கைகளை கவனமாக ஆராய்ந்த பின்னரே அவருக்கு சாமியார் பட்டம் வழங்க சாதுக்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு சுரேந்திர ஜெயின் கூறினார்.

அகாரா பரிஷத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘சாமியாராக இருப்பவர் தனது பெயரில் பணமோ சொத்தோ வைத்திருக்கக் கூடாது. அறக்கட்டளையின் பெயரில்தான் பணமும் சொத்துக்களும் இருக்க வேண்டும். அவற்றை மக்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x