Published : 14 Apr 2023 03:45 AM
Last Updated : 14 Apr 2023 03:45 AM

ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கில் ஏப்ரல் 20-ம் தேதி உத்தரவு

சூரத்: ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், வரும் 20-ம் தேதி உத்தரவு வழங்கப்படுகிறது.

2019-ல் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘‘எல்லா திருடர்களுக்கும் மோடி எனப் பெயர் வந்தது எப்படி?" என்று விமர்சித்தார். இது தொடர்பாக குஜராத் பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இதில் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ராகுலின் எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில், சிறை தண்டனைக்கு தடை கோரி ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை, சூரத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஆர்.பி.மொகேரா முன்னிலையில் நேற்று நடை பெற்றது.

ராகுல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.எஸ் சீமா, ‘‘இந்த வழக்கு எலெக்ட்ரானிக் ஆதாரங்கள் அடிப்படையிலானது. ராகுல் பேசியதை செய்தியில் பார்த்து, 100 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள ஒருவர் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். இதில் அதிகபட்ச தண்டனை தேவையில்லை’’ என்றார்.

பர்னேஷ் மோடியின் வழக்கறிஞர் ஹர்ஷித் டோலியா வாதிடும்போது, ‘‘தனது கருத்துகள் மூலம் மோடி என்ற துணைப் பெயரை வைத்திருப்பவர்களை அவமானப்படுத்த ராகுல் முயன்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் அவ்வாறு பேசியது, மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் தனது உரையில், பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி மட்டும் பேசாமல், மோடி என்று துணைப் பெயர் உடையவர்கள் அனைவரையும் திருடர்கள் எனக் கூறியுள்ளார். மன்னிப்பு கேட்கவும் ராகுல் மறுத்துவிட்டார். எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கக் கூடாது’’ என்றார். இதையடுத்து நீதிபதி ஆர்.பி. மொகேரா, மேல்முறையீட்டு மனு மீது வரும் 20-ம் தேதி உத்தரவிடப்படும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x