Published : 04 Apr 2023 07:50 AM
Last Updated : 04 Apr 2023 07:50 AM

கேரளாவில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு: ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த 3 பேர் உயிரிழப்பு

விசாரணை மேற்கொள்ளும் போலீஸார்

ஆலப்புழா: கேரளாவில் ஓடும் ரயிலில் மர்ம நபர் ஒருவர் திடீரென சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி வைத்து விட்டு தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பயத்தில் ரயிலில் இருந்து கீழே குதித்து உயிரிழந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலத்தில் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருந்து ஆலப்புழா - கண்ணூர் விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. இரவு 9.30 மணி அளவில் கோழிக்கோடு மாவட்டம், எலத்தூர் ரயில் நிலையம் அருகே ரயில் சென்றது. அப்போது ரயிலின் டி1 பெட்டியில் பயணம் செய்த மர்ம நபர் திடீரென தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை பயணிகள் மீது ஊற்றி தீ வைத்துள்ளான். அப்போது பெட்ரோல் பட்டு பயணிகள் சிலருடைய ஆடையிலும் தீப்பிடித்துள்ளது. அதை பார்த்த மற்ற பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளனர்.

அந்த மர்ம நபர் வெளியில் குதித்து தப்பியோடினான். அதற்குள் தீயை பயணிகளே அணைத்துவிட்டு ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ரயில்வே போலீஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்தனர். அப்போது, தண்டவாளத்தில் கிடந்த ஒரு பையைக் கைப்பற்றினர். அதில் இன்னொரு பெட்ரோல் பாட்டில் மற்றும் 2 மொபைல் போன்கள் இருந்துள்ளன. அந்த பை தப்பியோடிய மர்ம நபருடையதா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ரயில் தண்டவாளத்தில் இருந்து பச்சிளம் குழந்தை, ஆண், பெண் என 3 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இறந்தவர்கள் தவுபிக் மற்றும் ரெஹனா என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்று பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் டி1 பெட்டியில் பரவிய தீயில் இருந்து தப்பிக்க ரயிலில் இருந்து வெளியில் குதித்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையில், தீக்காயம் அடைந்த 8 பயணிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான முக்கியமான காட்சிகளை போலீஸார் கைப்பற்றி உள்ளனர். மேலும், பயணிகள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மர்ம நபரின் உருவப் படத்தை போலீஸார் வரைந்து வெளியிட்டுள்ளனர். போலீஸார் கூறும்போது, ‘‘ரயிலில் பயணம் செய்த அந்த மர்ம நபர் திட்டமிட்டு இந்த செயலை செய்துள்ளதாக தெரிகிறது. அவர் எடுத்து வந்த பையில் பெட்ரோல் பாட்டில்களை கொண்டு வந்துள்ளார்.

இதற்கிடையில், மர்ம நபருக்கும் சக பயணிகளுக்கும் இடையில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதில் இருதரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்த மர்ம நபர் பயணிகள் மீது பெட்ரோல் தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது.

தீவிரவாத சதி

இந்த சம்பவத்துக்குப் பின்னணியில் தீவிரவாத சதி இருக்கலாம் என்பதை கேரள போலீஸார் மறுக்கவில்லை. அந்தக் கோணத்தில் விசாரணையை தொடங்கி உள்ளனர். ரயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் குறித்து முழு அறிக்கை அளிக்க கேரள போலீஸை மத்திய உளவுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து தீவிரவாத தடுப்புப் படை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) போன்ற அமைப்புகளும் விசாரணை நடத்தும் என்று தெரிகிறது.

சிறப்பு விசாரணை குழு

கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறும்போது, ‘‘ஆலப் புழா - கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். சம்பவம் குறித்து டிஜிபி அனில் காந்த் கண்காணிப்பில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x