Published : 01 Apr 2023 07:04 PM
Last Updated : 01 Apr 2023 07:04 PM

கவுரவர்களோடு ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒப்பிட்ட விவகாரம்: ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு

ஹரித்துவார்: 21-ம் நூற்றாண்டின் கவுரவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பு என விமர்சித்த ராகுல் காந்திக்கு எதிராக ஹரித்துவார் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி ஹரியாணாவில் கடந்த ஜனவரி 9-ம் தேதி பேசும்போது, 21ம் நூற்றாண்டின் நவீன கவுரவர்கள் ஆர்எஸ்எஸ் என கூறியதாக அவர் மீது ஹரித்துவார் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கமல் பதூரியா என்பவர் இந்த வழக்கை தொடுத்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பை அநாகரிகமாக விமர்சிக்கும் வகையில் ராகுல் காந்தி பேசி இருப்பது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 மற்றும் 500ன்படி குற்றமாகும் என்றும், எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு வரும் 12-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ள நீதிபதி சிவ் சிங், அப்போது வழக்கின் வாதி நேரில் ஆஜராக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கமல் பதூரியாவின் வழக்கறிஞர், ''21-ம் நூற்றாண்டின் கவுரவர்கள் ஆர்எஸ்எஸ் என கூறி ராகுல் காந்தி ஒப்பிட்டுள்ளார். இந்த அநாகரிகமான பேச்சு அவரது மனநிலையையே காட்டுகிறது. நாட்டில் இயற்கைப் பேரிடர் எங்கு ஏற்பட்டாலும் அங்கு விரைந்து சென்று சேவை செய்யக்கூடிய அமைப்பு ஆர்எஸ்எஸ். அப்படிப்பட்ட ஓர் அமைப்புக்கு எதிராக அவதூறாகப் பேசி இருப்பதால் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 12-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது'' எனத் தெரிவித்தார்.

மோடி சமூகம் குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறை தண்டனை காரணமாக ராகுல் காந்தி சமீபத்தில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். இந்நிலையில், அவர் மீது மற்றுமொரு அவதூறு வழக்கு ஹரித்துவாரில் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x