Published : 28 Mar 2023 03:36 PM
Last Updated : 28 Mar 2023 03:36 PM

பிபிசியின் பஞ்சாபி ட்விட்டர் கணக்கு முடக்கம்

புதுடெல்லி: பிபிசி செய்தி நிறுவனத்தின் பஞ்சாபி ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. பிபிசி செய்தி நிறுவனம் தனது செய்திகளை சமூக வலைதளமான ட்விட்டர் மூலமும் பகிர்ந்து வருகிறது. பஞ்சாபி மொழியில் பிபிசி வெளியிடும் செய்திகளை பகிர்வதற்காக bbcnewspunjabi என்ற பெயரில் கணக்கு வைத்துள்ளது. இந்நிலையில், அரசின் கோரிக்கையை ஏற்று அந்த கணக்கு முடக்கப்பட்டுள்ளது. எனினும், அரசு விடுத்த சட்டப்படியான வேண்டுகோள் குறித்த தகவல்களை ட்விட்டர் இதுவரை பகிரவில்லை.

பஞ்சாபைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாதியான அம்ரித்பால் சிங்கை கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தலைமறைவாகி உள்ள அவரை காவல்துறை தொடர்ந்து தேடி வருகிறது. இந்நிலையில், பிபிசி பஞ்சாபியின் ட்விட்டர் கணக்கு, பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள், பிரபலங்கள், ஷிரோமணி அகாலி தள் கட்சியைச் சேர்ந்த சங்ருர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சிம்ரன்ஜித் சிங் மான் உள்பட 120-க்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இவர்கள், அம்ரித்பால் சிங்கின் ட்விட்டர் கணக்கை பின்தொடர்வதாகவும் கூறப்படுகிறது.

குஜராத் கலவரத்துடன் நரேந்திர மோடியை தொடர்புபடுத்தும் The Modi Question என்ற ஆவணப்படத்தை பிபிசி தயாரித்தது. இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்ட இந்த ஆவணப்படங்களை இந்தியாவில் ஒளிபரப்ப முடியாதவாறு மத்திய அரசு தடை செய்தது. இதையடுத்து, டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி நிறுவனங்களில் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, பிபிசி நிறுவனத்தின் பஞ்சாபி ட்விட்டர் கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x