Last Updated : 26 Mar, 2023 05:05 AM

1  

Published : 26 Mar 2023 05:05 AM
Last Updated : 26 Mar 2023 05:05 AM

வாரணாசியை யாசகர்கள் இல்லாத நகரமாக மாற்ற முயற்சி - கலெக்டர் எஸ்.ராஜலிங்கத்தின் புதிய திட்டத்திற்கு வரவேற்பு

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தின் புனித நகரமான வாரணாசியை யாசகர்கள் இல்லாத நகரமாக மாற்ற அம்மாவட்ட ஆட்சியரான தமிழர் எஸ்.ராஜலிங்கம் முயற்சி மேற்
கொண்டுள்ளார். அவரது திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலால் புகழ்பெற்று விளங்கும் வாரணாசிக்கு அன்றாடம் பல லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு கங்கை கரை, கோயில்கள், முக்கிய சாலை சந்திப்புகள் உள்ளிட்ட பல இடங்களில், யாசகர்களால் யாத்ரீகர்களுக்கு தொல்லை ஏற்படுகிறது.

இதனை கூர்ந்து கவனித்த தமிழரான மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம், ‘பிக் ஷாவர்த்தி முக்த் காசி (யாசகர்கள் இல்லாத காசி)’ என்ற திட்டத்தை அப்னாகர் எனும் பொதுநல அமைப்பு, நகராட்சி மற்றும் காவல்துறையுடன் இணைந்து அமல்படுத்தியுள்ளார்.

இதன்படி யாசகர்கள் குறித்து ஒரு என்ஜிஓ மூலமாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிறகு அவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று, யாசகம் பெறுவதை கைவிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இச்செயல் சட்டப்படி குற்றம் எனவும் எச்சரிக்கப்பட்டது. சுமார் 15 நாட்களுக்கு உளவியல் பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டது. யாசகம் பெறுவதை நிறுத்தினால் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளிக்கப்பட்டது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் திருநெல்வேலி கடையநல்லூரை சேர்ந்தவரான ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம் கூறும்போது, ‘இவர்களில் பாதிபேர் பலரை வைத்து ஒரு தொழிலாகவே இதை செய்கின்றனர். ஒரு பகுதியினர் பொழுதை கடத்துவதற்காக பகுதி நேரமாக யாசகம் பெறுகின்றனர். உண்மையிலேயே இந்த நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் மிகவும் குறைவு. இவர்கள் அனைவருக்கும் நாங்கள் மூன்றுவேளை இலவச உணவுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். ஆனால் இந்த வாய்ப்பை மிகச்சிலரே பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இதுபோன்ற முயற்சிகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இம்முறை சுயதொழில் பயிற்சி அளிக்கும் திட்டமும் உள்ளதால் பலன் கிடைத்து வருகிறது. எங்கள் நடவடிக்கைக்கு பயந்து யாசகர்கள் வேறு இடங்களுக்கு மாறுவதாகவும் தகவல் கிடைக்கிறது. அவர்களையும் தேடிச் சென்று எங்கள் முயற்சி தொடர்கிறது” என்றார்.

ரொட்டி வங்கி திட்டம்: வாரணாசி ஆட்சியரின் இந்த முயற்சி ‘ரொட்டி வங்கி’ எனும் திட்டத்துடன் சேர்த்து அமல்படுத்தப்படுகிறது. இதன்படி உணவகங்கள், வீடுகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மீதமாகும் ரொட்டிகள் சேகரிக்கப்படுகின்றன. இவையும் யாசகர்களுக்கு அளிக்க உதவியாக உள்ளது. மேலும் இவர்களுக்காகவே ரொட்டி
செய்து தானமாக அளிப்பவர்களும் அதிகரித்து வருகின்றனர். யாசகம் பெறுவதில் சிறுவர், சிறுமியரை ஈடுபடுத்தும் சமூகவிரோத கும்பலும் உள்ளது. இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதனால் நிர்கதியாகும் குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்து கல்வி அளிக்கும் முயற்சியும் தொடர்கிறது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் யாசகம் பெறுவதும் அளிப்பதும் சட்டப்படி குற்றமாக உள்ளது. இதற்கு சிறை தண்டனை அளிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது. ஆனால் எந்த மாநில அரசும் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில்லை. வாரணாசி, பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியாகவும் அமைந்துள்ளதால், அதனை யாசகர்கள் இல்லாத நகரமாக்கும் முயற்சி தொடர்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x