Published : 24 Mar 2023 01:01 PM
Last Updated : 24 Mar 2023 01:01 PM

லண்டனில் இந்திய தூதரகம் முன் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் - டெல்லி காவல் துறை வழக்குப் பதிவு

லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

புதுடெல்லி: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக கடந்த 19-ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக பிரித்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாட்டை உருவாக்கும் முயற்சியில் வெளிநாடுவாழ் பஞ்சாபியர்களில் சிலர் முயன்று வருகின்றனர். இந்தியாவில் அவர்களுக்கு ஆதரவாக அம்ரித்பால் சிங் செயல்பட்டு வந்தார். சீக்கிய மத போதகரான அவர் மீது இருந்த வழக்குகள் தொடர்பாக அவரை கைது செய்ய போலீசார் முயன்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார். எனினும், அவரை கைது செய்வதில் பஞ்சாப் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

அம்ரித்பால் சிங்க்கு எதிரான காவல் துறை நடவடிக்கையைக் கண்டித்து லண்டனில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தூதரகத்தில் பறந்து கொண்டிருந்த இந்திய தேசியக் கொடியை அவர்கள் கீழே இறக்கியுள்ளனர். மேலும், தங்கள் கைகளில் காலிஸ்தான் கொடியை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, இது குறித்து விளக்கம் அளிக்க டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படாததே இதற்குக் காரணம் என்பதால், பதிலுக்குப் பதிலாக புதுடெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகத்திற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது. மேலும், அங்கு போடப்பட்டிருந்த பேரிகார்டுகளை அப்புறப்படுத்தியது.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து வெளியுறவுத் துறை செயலாளர் ஜேம்ஸ் கிளவர்லி, ''லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு எதிராக நிகழ்ந்த வன்முறை கண்டிக்கத்தக்கது. லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கான பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்'' என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, லண்டனில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதன் பேரில் டெல்லி போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து தகவல் தெரிவித்த காவல் துறை உயர் அதிகாரி ஒருவர், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கை தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கி உள்ளது என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x