Published : 28 Sep 2017 10:33 AM
Last Updated : 28 Sep 2017 10:33 AM

மருத்துவர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்வு: மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

மத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறும்போது, ‘‘மத்திய அரசின் கீழ் உள்ள சில துறைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஓய்வு வயது 60 ஆக உள்ளது. சில துறைகளில் பணி புரியும் மருத்துவர்களின் ஓய்வு வயது 62 ஆக உள்ளது. இந்த வேறுபாடு இல்லாமல் மருத்துவர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது’’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியதாவது:

மக்கள் நலனுக்காவும், நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டும் ‘ஆயுஷ்’ அமைச்சகம், ரயில்வே உட்பட மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் பணி ஓய்வு வயதை 65 ஆக அதிகரிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் நாட்டில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறைக்கும் தீர்வு காண முடியும். மேலும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் சேவையைத் தொடர்ந்து பெற முடியும்.

தற்போது அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை தொடர்ந்து பணியில் இருக்க வைப்பதன் மூலம் நோயாளிகள் மிகவும் பலனடைவார்கள். இந்த நடவடிக்கையால் அரசுக்கு பெரிய அளவில் நிதி பிரச்சினையும் எழாது. நாட்டில் தற்போது மத்திய அரசின் கீழ் இயங்கும் துறைகளில் 1,445 மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். பணி ஓய்வு வயதை அதிகரித்திருப்பதன் மூலம் இவர்களும் பயனடைவார்கள்.

இவ்வாறு அமைச்சர் ஜே.பி.நட்டா கூறினார்.

முன்னதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்), எல்லை பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எப்) பணியாற்றும் மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு வயதை தற்போதுள்ள 60 வயதில் இருந்து கடந்த ஜூலை மாதம் 65 ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதேபோல் அசாம் ரைபிள்ஸ் படையில் பணிபுரியும் மருத்துவர்களின் ஓய்வு வயதும் 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை முடிவின்படி மருத்துவர்கள் 62 வயது வரையில் நிர்வாகம் சார்ந்த பதவிகளை வகிக்கலாம். அதன்பிறகு 63 வயதில் இருந்து 65 வயது வரை மருத்துவர்கள் நிர்வாகம் சாராத பதவிகளில்தான் பணிபுரிய வேண்டும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x