Published : 23 Mar 2023 05:00 PM
Last Updated : 23 Mar 2023 05:00 PM

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: மாநில அரசுகள் 5 அடுக்குத் திட்டத்தை பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தல்

கோப்புப்படம்

புதுடெல்லி: நாட்டில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் 5 அடுக்குத் திட்டங்களைப் பின்பற்ற மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘நாட்டில் கரோனா பாதிப்புகள் அதிகரித்துவரும் நிலையில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் சோதனை செய்தல், கண்காணித்தல், சிகிச்சையளித்தல், கோவிட் நடைமுறையை பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்துதல் ஆகிய 5 அடுக்குத் திட்டங்களைக் கடைபிடிக்க வேண்டும். கரோனா தடுப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை தெரிந்து கொள்வதற்காக விரைவில் நாங்கள் பயிற்சி சோதனையை மேற்கொள்வோம். இந்தச் சோதனை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நடைபெறும்.

மேலும், அனைத்து மாநிலங்களும் இன்ஃப்ளூயன்சா மற்றும் கரோனா பாதிப்பு சிகிச்சைகளுக்கான மருந்துகள், உபகரணங்கள் கிடைப்பதை உறுதிசெய்து கொள்ளவேண்டும். இவை தவிர அனைத்து மாநிலங்களில் போதிய அளவிற்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், சுகாதாரப் பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்; என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிதரமர் ஆலோசனை: நாடு முழுவதும் கோவிட்-19 மற்றும் இன்ஃப்ளூயன்சா நோய் குறித்த சூழல்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடந்தது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை இந்த அறிவுத்தலை வழங்கியுள்ளது.

நேற்றைய ஆய்வுக் கூட்டத்தில், கோவிட் -19 தொற்றுநோய் இன்னும் முழுவதுமாக விலகவில்லை. எனவே, நாடு முழுவதும் நிலவும் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

ஒரு நாளில் 1,300 பேர் பாதிப்பு: இந்தநிலையில், கடந்த 140 நாட்களில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் புதன்கிழை ஒரே நாளில் 1,300 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 7,605 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 99 ஆயிரத்து 418 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா ஒருவர் தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர். இதன்படி, கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 816 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x