Published : 17 Mar 2023 12:33 PM
Last Updated : 17 Mar 2023 12:33 PM

எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும்கட்சி அமளி | 5-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

புதுடெல்லி: எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 5-வது நாளாக இன்றும் முடங்கின. இரண்டு அவைகளும் வரும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 13-ம் தேதி திங்கள்கிழமை தொடங்கியது. அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், அந்நிய மண்ணில் இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் ராகுல் காந்தி அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் பாஜகவும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், கடந்த 13, 14, 15, 16 -ம் தேதிகளில் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் தொடர்ந்து முடங்கின.

இந்தநிலையில், 5-வது நாள் அலுவலுக்காக இன்று காலையில் நாடாளுமன்றம் கூடியது. மக்களவை கேள்வி நேரத்துடன் இன்றைய தனது அலுவலைத் தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழங்கள் எழுப்பத் தொடங்கினர். பல உறுப்பினர்கள் மையப்பகுதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் சபையில் ஆடியோ துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சபாநாயாகர் ஓம் பிர்லா உறுப்பினர்களிடம் அவை இயங்க அனுமதிக்குமாறு வலுயுறுத்தினார். ஆனாலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழுக்கங்களை எழுப்பியதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல், இன்றைய அலுவல்களுக்காக மாநிலங்களவை காலையில் கூடியது. அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், கன்னட நடிகரும், எம்பியுமான ஜக்கேஷ்-க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தார். மாநிலங்களவையிலும் அவை உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களையில் எந்த நடவடிக்கைகளும் நடைபெறவில்லை. எனவே வரும் திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜக ஒரு தேசவிரோத கட்சி என்று குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக தனியார் செய்தி தொலைக்காட்சியிடம் பேசிய அவர், "அவர்களே (பாஜக) தேச விரோதிகள். அவர்கள் யாரும் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆனால் மற்றவர்களை அவர்கள் தேச விரோதிகள் என்று அழைப்பார்கள். வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் போன்ற பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைத் திருப்பவே அவர்கள் இதனைச் செய்கிறார்கள். ராகுல் காந்தி தேச விரோதியாக இருக்க முடியுமா? ஜனநாயகத்தைப் பற்றி விவாதிப்பவர்கள் எல்லாம் தேச விரோதிகளா? ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு அவர்கள் ஏன் வாய்ப்பு அளிக்கவில்லை" என்று கேள்வி எழுப்பினார். முன்னதாக, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, ராகுல் காந்தி தேசவிரோதிகளின் நிரந்தர கருவியாக மாறிவிட்டார் என்று இன்று விமர்சித்திருந்தார்.

இந்தநிலையில், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி எதிர்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, இந்நாள் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x