Last Updated : 14 Mar, 2023 11:43 AM

19  

Published : 14 Mar 2023 11:43 AM
Last Updated : 14 Mar 2023 11:43 AM

டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் - மார்ச் 20ம் தேதி தொடங்குகிறது

கோப்புப்படம்

புதுடெல்லி: நாடு முழுவதிலிமிருந்து விவசாய அமைப்பினர் மார்ச் 20-ல் தேசிய தலைநகரில் கூடிப்போராட்டம் நடத்த உள்ளனர்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை வாபஸ் பெறக் கோரி கடந்த 2020, ஆக.9 முதல் 2021 டிச.11ம் தேதி வரை விவசாயிகள் போராட்டம் நடத்தினர். டெல்லியின் எல்லைகளில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் அந்த மசோதாக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது.

அப்போது, தங்களது பிற கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை எனில், மீண்டும் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் எச்சரித்திருந்தனர். இந்தச்சூழலில், நாடு முழுவதிலும் உள்ள விவசாய சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பான பாரதிய கிஸான் மோர்ச்சா (பிகேஎம்) தனது மகாபஞ்சாயத்தை ஹரியானாவின் ஜிந்தில் கூட்டியது.

கடந்த ஜனவரி 26ம் தேதி நடைபெற்ற இந்த பஞ்சாயத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநில விவசாய சங்கங்கள் கலந்து கொண்டன.

அடுத்து பிப்ரவரி 9-ம் தேதி ஹரியானாவின் குருஷேத்ராவிலும் ஒரு மகாபஞ்சாயத்து கூடியது. இதைத் தொடர்ந்து மூன்றாவதாக, மூன்று நாட்களுக்கு முன்பு யுனைடெட் கிஸான் மோர்ச்சா (யுகேஎம்), உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் கூடி, மார்ச் 10-இல் டெல்லியில் போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளது.

இதன் கோரிக்கைகளாக, சுவாமிநாதன் ஆணைய அறிக்கை அமலாக்கல், விவசாயிகள் மீதான வழக்குகள் மற்றும் மின்சார சட்டதிருத்த மசோதா- 2022 வாபஸ், ஓய்வூதியம் ஆகியவை முக்கியமானவைகளாக உள்ளன. லக்கிம்பூர்கேரியில் விவசாயிகள் மீது வாகனம் ஏற்றி கொன்ற புகாரில் கைதானவரின் தந்தையான அஜய் மிஸ்ராவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதும் ஒரு கோரிக்கையாக உள்ளது. மேலும், விவசாயிகளின் போராட்டத்தின் போது இறந்த 740 விவசாயிகளுக்கு நிவாரணநிதி, குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளும் இடம் பெற்றுள்ளன.

இது குறித்து ’இந்து தமிழ் திசை’இணையத்திடம் யுகேஎம் தலைவர் யுத்வீர் சிங் கூறும்போது, "நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் டெல்லியில் கூடி மார்ச்- 20 ம் தேதி போராட்டம் நடத்துவார்கள். இந்தப் போராட்டம் காலவரையின்றி தொடருமா? என்பது அப்போது முடிவு செய்யப்படும். எங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால், தொடர் போராட்டத்திற்கு வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.

இந்த மூன்று பஞ்சாயத்துக்களிலும் விவசாய சங்கங்களின் முக்கியத் தலைவர்களாக ராகேஷ் திகாய்த், தர்ஷன் பால், ஜோகிந்தர் சிங் உக்ராஹன், ஜரீந்தர் சிங் லோகாவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரும் இணைந்து டெல்லியில் நடத்திய சுமார் ஒரு வருட கால போராட்டத்தால் டெல்லியின் காஜிபூர், நொய்டா உள்ளிட்ட எல்லைகள் மூடப்பட்டிருந்தன. அதைபோல், மீண்டும் போராட விவசாயிகள் திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தப் போராட்டத்தினை எதிர்கட்சிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் செய்யவும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x