Published : 01 Jul 2014 12:57 PM
Last Updated : 01 Jul 2014 12:57 PM

பாகிஸ்தானியர்கள் வருவதற்கு இலங்கை அரசு விசா கட்டுப்பாடு: இந்தியாவுக்கு எதிரான சதி முயற்சிகளுக்கு தடை

இந்தியாவில் தாக்குதல் நடத்தும் ஜிகாதி குழுக்கள் இந்தியாவுக்குள் நுழையும் வழியாக இலங்கையை பயன்படுத்துவது விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், பாகிஸ்தானியர்களுக்கு வழக்கமான விசா வழங்க இலங்கை தடை விதித்துள்ளது.

கடந்த மே 1-ம் தேதி பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ரயில் ஒன்றில் 2 குண்டுகள் வெடித்தன. இது தொடர்பான விசாரணையில், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜிகாதி குழுக்கள், இலங்கை மற்றும் மாலத்தீவுகள் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து புதிய தாக்குதல்கள் நடத்த சூழ்ச்சி செய்திருப்பது தெரியவந்தது.

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த ஜாகிர் உசேன் சென்னையில் இரு மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில், தாக்குதல் திட்டங்களுக்காக வேவு பார்ப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட முறை இந்தியா வந்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

பெங்களூர், சென்னையில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள், சென்னையில் விமான நிலையம், மின்னுற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தாக்கும் திட்டத்துடன் மாலத் தீவுகளில் இருந்து வரும் ஜிகாதி குழுக்களுக்கு உதவுவதே தனது வேலை என்றும் ஜாகிர் உசேன் கூறியுள்ளார்.

கொழும்புவில் உள்ள பாகிஸ் தான் தூதரகத்தில் பணியாற்றும் அந்நாட்டு அதிகாரிகள் சிலருக்கும் இதில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் கடந்த மே 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வந்திருந்தார். அவருடன் மோடி முதல்முறையாக பேசியபோது, இந்த விவகாரத்தை எழுப்பினார். இப்பிரச்சினையின் தீவிரத்தை அவருக்கு உணர்த்தினார். இந்நிலையில் இலங்கை திரும்பிய ராஜபக்சே இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டதாக நம்பப்படுகிறது. இந்த விசாரணையின் அடிப்படையில் இலங்கை இந்த முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து அடைக்கலம் கோரி இலங்கை வந்த சுமார் 1500 பேரை இலங்கை அதிகாரிகள் சுற்றிவளைத்து, அவர்களை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு பயணம் செய்வதற்கு, அவர்கள் நாடு திரும்பும் தேதியுடன் கூடிய விசாக்கள் மட்டுமே இனி வழங்க முடியும் என்று பாகிஸ்தான் வெளி யுறவுத் துறையிடம் இலங்கை திட்டவட்டமாக கூறிவிட்டது.

சுற்றுலாப் பயணியாக இலங்கை வரும் பாகிஸ்தானியர் கள் பலர், அகதிகளாக அங் கேயே தங்கிவிடுவது இலங்கை அரசின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

2013-ல் இலங்கையில் அடைக்கலம் கேட்டு சுமார் 1500 பாகிஸ்தானியர் தங்கியிருப்பதை ஐ.நா. மனித உரிமை ஆணையம் பதிவு செய்துள்ளது. இந்நிலையில் விசா காலம் முடிந்த பிறகும் இலங்கையில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x