Published : 11 Mar 2023 05:22 AM
Last Updated : 11 Mar 2023 05:22 AM

இந்து கோயில்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் - ஆஸி. பிரதமரிடம் இந்திய பிரதமர் மோடி கவலை

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளின் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனர். படம்: பிடிஐ

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக அந்த நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் பிரதமர் மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் 4 நாள் பயணமாக கடந்த 8-ம் தேதி இந்தியா வந்தார். முதல் நாளில் குஜராத் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்ட அவர், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஹோலி பண்டிகையிலும் பங்கேற்றார்.

அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடியும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணியும் ஒன்றாகப் பார்த்து ரசித்தனர்.

இதைத் தொடர்ந்து டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸுக்கு நேற்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடியை அவர்சந்தித்துப் பேசினார். வர்த்தகம், பாதுகாப்பு தொடர்பாக இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர். அப்போது, சூரிய மின் சக்தி, விளையாட்டு உள்ளிட்ட துறைகள் தொடர்பாக இந்தியா -ஆஸ்திரேலியா இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஆஸ்திரேலியாவில் சுமார் 7.21 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் 43 இந்து கோயில்கள் அமைந்துள்ளன. ஆஸ்திரேலியாவில் அண்மைகாலமாக இந்து கோயில்கள் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறும்போது, “ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியினர் அமைதி யாக வாழ்கின்றனர். எங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு அதிகம். இந்து கோயில்கள், இந்திய வம்சாவளியினரின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப் படும். அவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இரு பிரதமர்களும் நிருபர் களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: இந்திய பெருங்கடல், பசிபிக் கடல் பகுதியில் சுதந்திரமான, பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன. ஹைட்ரஜன் உற்பத்தி, சூரிய சக்தி மின் உற்பத்தியில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின் றன. இரு நாடுகள் இடையே வர்த்தக, பாதுகாப்பு உறவு மேலும் வலுவடையும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அந்தோணி அல்பானீஸ் பேசியதாவது: இந்தியா, ஆஸ்திரேலியா இடையே விரிவான வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் கையெழுத்தாகும்.சூரிய சக்தி மின்சாரம், ஹைட்ரஜன் எரிசக்தி தொழில்நுட்பங்களை பரிமாறிக் கொள்வதில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. வர்த்தகம், பாதுகாப்பு, கல்விகலாச்சார துறைகளில் இரு நாடுகள் இடையிலான உறவு மேலும்வலுவடையும். ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. வரும் செப்டம்பரில் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத் திருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

இந்திய பயணம் குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது: சூரிய மின்சக்தி துறையில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து செயல்படுகின்றன. இதுதொடர்பாக இந்திய நிறுவனங் களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னேன். சூரிய மின் உற்பத்திக்கான தகடுகளை தயாரிப்பது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. சிறப்பு அழைப்பின் பேரில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலை பார்வையிட்டேன். விரை வில் இந்திய, ஆஸ்திரேலிய கடற்படைகள் இணைந்து போர் ஒத்திகையை நடத்த உள்ளன.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்கெனவே அமலில் உள்ளது. இதை மேலும் மேம்படுத்த இந்த ஆண்டு டிசம்பருக்குள் விரி வான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகும். ரஷ்யாவுடன் நட்பு பாராட்டுவது இந்தியாவின் தனிப்பட்ட கொள்கை. எங்களைப் பொறுத்தவரை இந்தியாமிகவும் நம்பகமான நட்பு நாடு. இவ்வாறு அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x