Published : 16 Sep 2017 07:05 AM
Last Updated : 16 Sep 2017 07:05 AM

அமைச்சர் நிதின் கட்கரியுடன் ஆலோசனை: ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் இணைப்பு - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

‘‘விரைவில் ஓட்டுநர் உரிமத்துடன் (டிரைவிங் லைசன்ஸ்) ஆதார் எண் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது’’ என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

சமையல் எரிவாயு, மதிய உணவு, முதியோர் ஓய்வூதியம், வங்கி சேவை மற்றும் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தொடரப்பட்டன. அதில், ஆதார் எண்ணுக்காக வழங்கப்பட்டுள்ள தனிநபர் தகவல்கள் அனைத்தும் அந்தரங்கமானவை, அவை அடிப்படை உரிமையாகும். எனவே, ஆதார் எண் கட்டாயம் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத் துள்ளது.

இந்நிலையில், ‘டிஜிட்டல் ஹரியாணா’ என்ற தலைப்பில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பங்கேற்றார். பின்னர் அவர் கூறியதாவது:

ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் பேசியிருக்கிறேன். டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியால் டிஜிட்டல் தகவல்கள் மூலம் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவரின் அங்க அடையாளங்களை எளிதில் கண்டறியலாம். சட்டவிரோத பண பரிமாற்றத்தைத் தடுக்க பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. அதுபோல் ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண் இணைப்பதால் பலன் கிடைக்கும்.

இவ்வாறு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

ஆனால், அதற்கான காலக்கெடு எதையும் அவர் தெரிவிக்கவில்லை. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு டிசம்பர் 31-ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x