Published : 03 Mar 2023 06:20 AM
Last Updated : 03 Mar 2023 06:20 AM

5-வது முறை நாகாலாந்து முதல்வராகும் நெய்பியூ ரியோ

கொஹிமா: தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியின் (என்டிபிபி) மூத்த தலைவர் நெய்பியூ ரியோ கடந்த 2003-ம் ஆண்டில் முதல்முறையாக நாகாலாந்து முதல்வராக பதவியேற்றார். கடந்த 2008, 2013, 2018 ஆண்டுகளில் அடுத்தடுத்து முதல்வராக பதவியேற்றார். தற்போதைய நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் என்டிபிபி, பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருப்பதால் 5-வது முறையாக அவர் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

அங்கமி நாகா குடும்பத்தில் கடந்த 1950 நவம்பர் 11-ம் தேதிபிறந்த நெய்பியூ ரியோ, கொஹிமாவில் உள்ள பள்ளியில் ஆரம்பகல்வி பயின்றார். பின்னர் மேற்குவங்கத்தின் புருலியாவில் உள்ள சைனிக் பள்ளியில் சேர்ந்தார். டார்ஜிலிங், கொஹிமாவில் உள்ள கல்லூரிகளில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

கடந்த 1987-ம் ஆண்டில் அரசியலில் கால் பதித்தார். ஐக்கிய ஜனநாயக முன்னணி, காங்கிரஸ், நாகா மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளில் இருந்த அவர் கடந்த 2018-ம் ஆண்டில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியில் இணைந்தார்.

கிறிஸ்தவர்கள் அதிகமுள்ள நாகாலாந்தில் பாஜக வெற்றி: வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் கிறிஸ்தவர்கள் 87.9 சதவீதம் உள்ளனர். இந்துக்கள் 8.7 சதவீதம் பேரும் முஸ்லிம்கள் 2.5 சதவீதம் பேரும், புத்த மதத்தினர் 0.3 சதவீதம் பேரும் உள்ளனர்.

மேகாலயாவில் 74.59 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் 11.53 சதவீதம் பேரும் முஸ்லிம்கள் 4.4 சதவீதம் பேரும் உள்ளனர். நாகாலாந்தில் 20 தொகுதிகளிலும் மேகாலயாவில் 60 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்டது. இந்த 80 வேட்பாளர்களில் 75 பேர் கிறிஸ்தவர்கள். இதில் நாகாலாந்தில் பாஜக 12 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. மேகாலயாவில் தனித்துப் போட்டியிட்ட பாஜக, 2 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x