Published : 03 Mar 2023 04:58 AM
Last Updated : 03 Mar 2023 04:58 AM

நில ஒதுக்கீடு தொடர்பாக வாக்குவாதம் - நீதிமன்ற அறையை விட்டு வெளியேற வழக்கறிஞர் சங்க தலைவருக்கு தலைமை நீதிபதி உத்தரவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்அறைகளுக்கு நில ஒதுக்கீடு தொடர்பான மனுவை விசாரிப்பது தொடர்பாக, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவர் விகாஸ் சிங் இடையே நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் விகாஸ் சிங் நேற்று ஆஜரானார். உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அறைகளுக்கு ஒருவளாகம்தான் வழங்கப்பட்டது. வழக்கறிஞர் அறைகளுக்கான கட்டுமானம் முன்னாள் தலைமை நீதிபதி என்.வி. ரமணா காலத்திலேயே தொடங்கியிருக்க வேண்டும். இதுதொடர்பான மனுவை விசாரணைக்கு பட்டியலிட நாங்கள் 6 மாதங்களாக போராடுகிறோம். ஆனால், என்னை சாதாரண மனுதாரர் போல் நடத்துகிறீர்கள்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ‘‘ நிலம் ஒதுக்கும்படி இப்படியெல்லாம் நீங்கள் கோரிக்கை விடுக்க முடியாது. நாங்கள் என்ன நாள் முழுவதும் வீணாக உட்கார்ந்திருக்கிறோமா? என்றார்.

விகாஸ் சிங் பதில் அளிக்கையில், ‘‘நான் அப்படி கூறவில்லை. இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிடத்தான் முயற்சிக்கிறேன். இது நடக்கவில்லையென்றால், நான் உங்கள் வீட்டுக்கு வரவேண்டியிருக்கும். வழக்கறிஞர்கள் இதுபோல் நடத்தப்படுவதை நான் விரும்பவில்லை’’ என்றார்.

இதனால் கோபம் அடைந்த சந்திரசூட், ‘‘தலைமை நீதிபதியை மிரட்டாதீர். இதுதான் நீங்கள் நடந்துகொள்ளும் விதமா? உட்காருங்கள். மனுவை விசாரணைக்கு பட்டியலிடமாட்டேன். நான் உங்களுக்கு அடிபணியமாட்டேன். நீங்கள் வெளியேறுங்கள். விகாஸ் சிங் குரலை உயர்த்தி பேச வேண்டாம். வழக்கறிஞர் சங்க தலைவராகிய நீங்கள், வழிநடத்துபவராக இருக்க வேண்டும். நீங்கள் தரம் தாழ்ந்து பேசுகிறீர்கள். உச்ச நீதிமன்றத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை வழக்கறிஞர்கள் அறைகட்டுவதற்கு ஒப்படைக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்துள்ளீர்கள். அதை விசாரிக்கும்போது விசாரிப்போம். நீங்கள் விரும்பும் வகையில் நாங்கள் செயல்பட வேண்டும் என முயற்சிக்க வேண்டாம். உங்கள் மனுவை 17-ம் தேதி விசாரிக்க முடிவு செய்துள்ளேன். அதை முதலில் விசாரிக்க மாட்டோம். ‘உச்ச நீதிமன்றத்தில் 22 ஆண்டுகளாக பணியாற்றுகிறேன். வழக்கறிஞர் சங்க உறுபபினரையோ மற்றும் வேறுயாரையும், இதுபோல் கட்டாயப்படுத்த நான் அனுமதித்ததில்லை. எனது அடுத்த 2 ஆண்டு பதவிக் காலத்திலும் அனுமதிக்கமாட்டேன்.’’ என்றார்.

சரியான அணுகுமுறை அல்ல: விகாஸ் சிங் கூறுகையில், ‘‘இது சரியான அணுகுமுறை அல்ல.வழக்கறிஞர் சங்கம் உச்சநீதிமன்றத்துடன் ஒத்துழைப்புடன் இருப்பதால், அதை இஷ்டத்துக்கு நடத்தலாம் என அர்த்தம் அல்ல’’ என்றார். இதற்கு பதில் அளித்த சந்திரசூட், ‘‘உங்கள் வேலையை நீதிமன்றத்துக்கு வெளியே வைத்து கொள்ளுங்கள்’ என கூறி அடுத்தமனு மீதான விசாரணையை தொடங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x