Published : 03 Mar 2023 05:30 AM
Last Updated : 03 Mar 2023 05:30 AM

உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண அமைதி பேச்சுக்கு உதவ இந்தியா தயார் - இத்தாலி பிரதமரிடம் நரேந்திர மோடி உறுதி

புதுடெல்லி: உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண அமைதி பேச்சுவார்த்தைக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா, இத்தாலி இடையே ராஜதந்திர உறவு ஏற்பட்டு 75 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்தடைந்த மெலோனிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்தாலியின் முதல் பெண் என்ற வகையில் அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். வர்த்தகம், பாதுகாப்பு, அறிவியல் தொழில்நுட்பம், எரிசக்தி, சுகாதாரம், கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர். மேலும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். குறிப்பாக ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியிடம் மெலோனி கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்புக்குப் பிறகு இருதலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் மோடி பேசும்போது, “உக்ரைன் போர் காரணமாக வளரும் நாடுகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உணவு, உரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இது தொடர்பான கவலையை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

உக்ரைன் மீதான போர் தொடங்கியதிலிருந்தே, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கை மூலம் மட்டுமே இதற்கு தீர்வு காணமுடியும் என இந்தியா கூறி வருகிறது. அந்த வகையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு உதவ இந்தியாதயாராக உள்ளது” என்றார்.

ஜியார்ஜியா மெலோனி கூறும்போது, “உலக நாடுகளின் தலைவர்களால் மிகவும் விரும்பப்படுபவராக பிரதமர் மோடி திகழ்கிறார். இதன்மூலம் அவர் சிறந்த தலைவர் என்பது நிரூபணமாகிறது. இதற்காக அவருக்கு வாழ்த்துகள். இப்போது ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குகிறது. இந்த சூழ்நிலையில், உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

ஒருமித்த கருத்து அவசியம்: புவிசார் அரசியல் தொடர்பான கருத்து வேறுபாடுகளை மறந்து சர்வதேச சவால்களை எதிர்கொள்ள ஒருமித்த கருத்து அவசியம் என்று ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை கடந்த டிசம்பர் மாதம் இந்தியா ஏற்றுக்கொண்டது. இதையடுத்து பல்வேறு கூட்டங்கள் நாட்டின் பல நகரங்களில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஜி20 அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமெரிக்கா (ஆன்டனி பிளிங்கன்), ரஷ்யா (செர்கே லாவ்ரோவ்), சீனா (க்வின் காங்), பிரிட்டன் (ஜெம்ஸ் க்ளெவர்லி) உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர். உக்ரைன் மீதான போரால் ரஷ்யா-சீனா மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருவதற்கு ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னலினா பார்பக், பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் க்ளெவர்லி மற்றும் ஐரோப்பிய யூனியன் வெளியுறவு விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோசப் போரெல் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அதேநேரம், ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான 12 அம்ச சீன அமைதி திட்டத்தை சீன வெளியுறவு அமைச்சர் க்வின் காங் முன்வைத்தார்.

இந்த கூட்டத்தின் இறுதி நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசிய வீடியோ பதிவு ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர் பேசியதாவது:

கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடி, காலநிலை மாற்றம்,கரோனா பெருந்தொற்று, தீவிரவாதம், போர் ஆகியவற்றால் உலகநாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஊழல், உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை என பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றன. இவற்றுக்கெல்லாம் ஜி20 அமைப்பு தீர்வு காணும் என உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றன. இதற்கான திறன் ஜி20 அமைப்பிடம் உள்ளது.

எனவே, புவிசார் அரசியல் தொடர்பான கருத்து வேறுபாடுகளை மறந்து சர்வதேச சவால்களை எதிர்கொள்ள ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டியது அவசியம். புத்தர், காந்தி பிறந்த மண்ணில் கூடியுள்ள நிலையில், உங்கள் அனைவருக்கும் இந்தியாவின் நாகரீக நெறிமுறைகள் மீது ஈடுபாடு ஏற்பட வேண்டும் என வேண்டுகிறேன். நம்மை பிரிக்கும் விஷயத்தில் நாம்கவனம் செலுத்தக் கூடாது. மாறாகநம்மை ஒன்றிணைக்கும் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

உலக அளவில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் நீங்கள் இங்கு கூடியுள்ளீர்கள். இது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் என்பதால் புவிசார் அரசியல் தொடர்பான பதற்றம் காரணமாக பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

அனைவரும் இணைந்து செயல்பட்டால் எல்லா பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x