

ஆசிரியர்களின் நலன் காக்க ரூ.225 கோடியில் புதிய திட்டங்கள்: தனது பிறந்த நாளை முன்னிட்டு அரசுப் பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு 3 புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி வழங்கப்படும். மாணவர் வாழ்க்கை ஏற்றம் காண அயராது உழைக்கும் ஆசிரியப் பெருமக்களின் உடல்நலம் காக்க, அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும். உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவு 50,000 ரூபாய் வரை உயர்த்தி வழங்கப்படும். அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
வீட்டு உபயோக, வணிக சிலிண்டர்கள் விலை அதிகரிப்பு: சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாயும், வணிக சிலிண்டர் விலை ரூ.350 ரூபாயும் அதிகரிக்கப்படுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் மார்ச் 1 ஆம் தேதியான புதன்கிழமை இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பாஜகவின் விஜய சங்கல்ப யாத்திரை தொடக்கம்: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் விஜய சங்கல்ப யாத்திரையை அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா தொடங்கிவைத்தார்.
தற்போதைய கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மே 24ம் தேதியோடு முடிவடைகிறது. அதற்கு முன்பாக, தேர்தல் நடத்தி புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும். எனவே, கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்ற நிலை உள்ளது.
இந்நிலையில், இந்த தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் 4 யாத்திரைகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. பேருந்துகள் மூலம் தலைவர்கள் இந்த யாத்திரையில் பயணிக்க இருக்கிறார்கள். அதன்படி, முதல் யாத்திரையை கட்சித் தலைவர் ஜெ.பி. நட்டா புதன்கிழமை தொடங்கிவைத்தார். காமராஜ் நகரில் நடைபெற்ற இதற்கான தொடக்க விழாவில் ஆயிரக்கணக்கில் பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
யாத்திரைக்கு ஏற்ப பேருந்தின் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் பேருந்து தயார் செய்யப்பட்டிருந்தது. பேருந்தில், முதல்வர் பசவராஜ் பொம்மை, மூத்த தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் அமர்ந்திருக்க பாஜக கொடியை அசைத்து யாத்திரையை ஜெ.பி. நட்டா தொடக்கிவைத்தார்.
யாத்திரையை தொடங்கிவைத்துப் பேசிய ஜெ.பி. நட்டா, ''இரண்டாவது விஜய சங்கல்ப யாத்திரையை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை பெலகவியில் தொடங்கிவைப்பார். மற்ற இரண்டு யாத்திரைகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை மறுநாள் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து தொடங்கிவைப்பார். 4 வெவ்வேறு இடங்களில் இருந்து புறப்படும் இந்த யாத்திரைகள் மாநிலத்தின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கும் செல்லும். 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த யாத்திரைகள் நடைபெற உள்ளன. இந்த யாத்திரைகளின்போது 75 பொதுக்கூட்டங்கள், 150 சாலைவழி பிரச்சாரங்கள் நடைபெற உள்ளன'' என தெரிவித்தார்.
மதிப்பெண்ணுடன் கூடிய சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி: கரோனா பரவல் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்ட 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய, மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“நன்கு திட்டமிடப்பட்ட நகரங்களே நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்”: மத்திய பட்ஜெட்டுக்கு பிந்தைய வெபினர் உரையில் பிரதமர் மோடி, ‘நகர்ப்புற திட்டமிடல், மேம்பாடு மற்றும் சுகாதாரம்’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “இந்தியாவில் நகரமயமாகி வருவது வேகமாக நிகழ்ந்து வரும் நிலையில், எதிர்காலத்திற்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவது முக்கியமானதாகும். நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரங்களே இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். திட்டமிடல் சிறப்பானதாக இருக்கும்போது நமது நகரங்கள் காலநிலையைத் தாங்கும் வகையிலும், நீர்ப் பாதுகாப்பு மிக்கதாகவும் மாறும்” என்று தெரிவித்தார்.
‘பஞ்சாபில் ஜனநாயகத்தை பாதுகாத்த உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி’: பஞ்சாப் மாநில ஜனநாயகத்தை பாதுகாத்த உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். பஞ்சாபில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் முதல்வர் பகவந்த் மானுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், “அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு இருந்தாலும் ஆளுநரும் முதல்வரும் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஆளுநர் கேட்கும் விவரங்களை அளிக்க மாநில அரசு கடமைப்பட்டிருக்கிறது. அதேபோல், அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் கடமைப்பட்டிருக்கிறார்'' என தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரியில் இந்தியாவின் மின் நுகர்வு 9% அதிகரிப்பு: பிப்ரவரியில் இந்தியாவின் மின் நுகர்வு 9% அதிகரித்ததாகவும், பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட்டின் அளவு 11 புள்ளி 78 ஆயிரம் கோடியாக இருந்ததாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 பவுலர் ஆனார் அஸ்வின்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அண்மை டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பவுலர்களில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின். இதன் மூலம் முதல் இடத்தில் இருந்த இங்கிலாந்து அணியின் பவுலர் ஆண்டர்சனை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார்.
குரூப்-2 தேர்வை ரத்து செய்து மறுத்தேர்வு நடத்த வலியுறுத்தல்: "குழப்பமும், குளறுபடிகளும் நிறைந்த குருப்-2 தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்துவதுதான் தேர்வாணையத்தின் நம்பகத் தன்மையை உறுதி செய்யும்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் பிப்ரவரி மாத பணவீக்கம் 31.6% ஆக உயர்வு: பாகிஸ்தானில் பணவீக்கம் முன் எப்போதுமில்லாத அளவாக பிப்ரவரி மாதத்தில் 31.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனிடையே, அத்தியாவசியப் பொருட்களின் இருப்புக்கும் தேவைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நிலைமையை உண்ணிப்பாக கண்காணித்து வருவதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.