

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அண்மை டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பவுலர்களில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின். இதன் மூலம் முதல் இடத்தில் இருந்த இங்கிலாந்து அணியின் பவுலர் ஆண்டர்சனை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெல்லி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் அவர் இப்போது முதல் இடத்திற்கு முந்தியுள்ளதாக தெரிகிறது. கடந்த 2015-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 பவுலர் ஆனார் அஸ்வின். அது முதல் பல்வேறு தருணங்களில் அவர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பவுலர்களுக்கான தரவரிசையில் தற்போது 864 ரேட்டிங் உடன் முதல் இடத்தில் அவர் உள்ளார். அதே போல டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் 376 ரேட்டிங் உடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எஞ்சியுள்ள கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் வீழ்த்துவதன் மூலம் அஸ்வின் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்க வாய்ப்புள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி தரவரிசையில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே போல டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் நம்பர் 1 பேட்ஸ்மேனாகவும், ஹர்திக் பாண்டியா நம்பர் 2 ஆல்ரவுண்டராகவும் உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் சுப்மன் கில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் டாப் 10 வீரர்களில் இடம் பிடித்துள்ளனர்.
சிராஜ், நம்பர் 1 ஒருநாள் கிரிக்கெட் பவுலராக உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ரோகித் சர்மா, 9-வது இடத்தில் உள்ளார். பந்த் 8-வது இடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்களுக்கான தரவரிசையில் ஜடேஜா 8-வது இடத்தில் உள்ளார். அவர் நம்பர் 1 டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அக்சர் படேல், டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ளார்.