Published : 01 Mar 2023 04:29 PM
Last Updated : 01 Mar 2023 04:29 PM

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் | பாஜகவின் விஜய சங்கல்ப யாத்திரையை தொடக்கிவைத்தார் ஜெ.பி.நட்டா

காமராஜ்நகர்: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் விஜய சங்கல்ப யாத்திரையை அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று தொடங்கிவைத்தார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: தற்போதைய கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மே 24ம் தேதியோடு முடிவடைகிறது. அதற்கு முன்பாக, தேர்தல் நடத்தி புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும். எனவே, கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்ற நிலை உள்ளது.

விஜய சங்கல்ப யாத்திரைகள்: இந்நிலையில், இந்த தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் 4 யாத்திரைகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. பேருந்துகள் மூலம் தலைவர்கள் இந்த யாத்திரையில் பயணிக்க இருக்கிறார்கள். அதன்படி, முதல் யாத்திரையை கட்சித் தலைவர் ஜெ.பி. நட்டா இன்று தொடங்கிவைத்தார். காமராஜ் நகரில் நடைபெற்ற இதற்கான தொடக்க விழாவில் ஆயிரக்கணக்கில் பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

யாத்திரைக்கு ஏற்ப பேருந்தின் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் பேருந்து தயார் செய்யப்பட்டிருந்தது. பேருந்தில், முதல்வர் பசவராஜ் பொம்மை, மூத்த தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் அமர்ந்திருக்க பாஜக கொடியை அசைத்து யாத்திரையை ஜெ.பி. நட்டா தொடக்கிவைத்தார்.

யாத்திரையை தொடங்கிவைத்துப் பேசிய ஜெ.பி. நட்டா, ''இரண்டாவது விஜய சங்கல்ப யாத்திரையை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை பெலகவியில் தொடங்கிவைப்பார். மற்ற இரண்டு யாத்திரைகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை மறுநாள் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து தொடங்கிவைப்பார். 4 வெவ்வேறு இடங்களில் இருந்து புறப்படும் இந்த யாத்திரைகள் மாநிலத்தின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கும் செல்லும். 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த யாத்திரைகள் நடைபெற உள்ளன. இந்த யாத்திரைகளின்போது 75 பொதுக்கூட்டங்கள், 150 சாலைவழி பிரச்சாரங்கள் நடைபெற உள்ளன'' என தெரிவித்தார்.

பழங்குடி மக்களுடன் உரையாடல்: இந்த விழாவில் கர்நாடகாவின் சோலிகா பழங்குடி சமூக மக்களுடன் ஜெ.பி. நட்டா உரையாடினார். அப்போது, ''நாடு முழுவதும் 27 பழங்குடி ஆராய்ச்சி மையங்களை மத்திய அரசு ஏற்படுத்த உள்ளது. 36 ஆயிரம் பழங்குடி கிராமங்களை மாதிரி கிராமங்களாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது பழங்குடி மக்களின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்'' என நட்டா கூறினார்.

மோடியின் உரையுடன் நிறைவடைய உள்ள யாத்திரைகள்: கர்நாகாவின் 4 வெவ்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்டு மாநிலம் முழுவதும் செல்ல உள்ள இந்த யாத்திரைகள் அனைத்தும் வரும் 25ம் தேதி தாவனகிரி என்ற இடத்தில் நிறைவடையும் என்று பாஜக தெரிவித்துள்ளது. அன்றைய தினம் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுவார் என்றும் பாஜக தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x