Published : 26 Feb 2023 06:23 AM
Last Updated : 26 Feb 2023 06:23 AM

உக்ரைன் போருக்கு தீர்வு காண அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார் - பிரதமர் நரேந்திர மோடி பேட்டி

புதுடெல்லி: ‘‘உக்ரைன் போருக்கு தீர்வு காணும் அமைதி பேச்சுவார்த்தைக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது’’ என ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்ஸை சந்தித்து பேசிய பின் பிரதமர் மோடி கூறினார்.

ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸகால்ஸ் நேற்று இந்தியா வந்தார். அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இருவரும் 4-வது முறையாக சந்தித்து கொண்டனர். இந்திய வருகை குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஓலப் ஸகால்ஸ், ‘‘இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே நல்ல உறவு உள்ளது. இதை மேலும் வலுப்படுத்த விரும்புகிறேன். எங்கள் பேச்சுவார்த்தையில் இது முக்கிய அம்சமாக இருக்கும். உலகத்தில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து நாங்கள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த வுள்ளோம்’’ என குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பு உறவுகள், பிராந்திய பிரச்சினைகள், உக்ரைன் விவ காரம் உட்பட உலகளாவிய பிரச்சினைகள் குறித்து ஜெர்மன் பிரதர் ஓலப் ஸ்கால்ஸும், பிரதமர் மோடியும் ஆலோசனை நடத்தினர். அதன்பின் இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர்.

ஸ்கால்ஸ் அளித்த பேட்டியில், ‘‘உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுரு வியதால் உலகமே அதன் விளைவுகளை அனுபவிக்கின்றன. வன்முறை மூலம் யாரும் எல்லை களை மாற்ற முடியாது. உக்ரைன் போரால் ஏராளமான இழப்பும், பேரழிவும் ஏற்பட்டுள்ளது. இந்த போரால், ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் பாதிக் கப்படாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.

பிரதமர் மோடி அளித்த பேட்டி யில் கூறியதாவது: உக்ரைன் பிரச்சினை தொடங்கியதிலிருந்தே, இதற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. எந்தவித அமைதி பேச்சு நடவடிக்கைக்கும் உதவ இந்தியா தயாராக உள்ளது. கரோனா தொற்று மற்றும் உக்ரைன் பிரச்சினையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஒட்டுமொத்த உலகமே உணர்ந்துள்ளது.

தீவிரவாதத்தக்கு எதிராக போராடுவதில் இந்தியா-ஜெர்மனி இடையே நல்ல ஒத்துழைப்பு நிலவுகிறது. எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு முடிவு கட்ட, உறுதியான நடவடிக்கை அவசியம் என்பதை இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இரு நாடுகள் இடையேயான உறவில் ராணுவ ஒத்துழைப்பு முக்கிய தூணாக இருக்கும். இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்கள் குறித்து நாங்கள் விரிவாக விவாதித்தோம். இந்தியாவில் முதலீடு செய்வதில் ஜெர்மனி முக்கிய நாடாக உள்ளது. இரு பெரிய ஜனநாயக பொருளாதார நாடுகள் இடையே ஒத்துழைப்பு அதிகரிப்பது இந்தியா மற்றும் ஜெர்மனி மக்களுக்கு பலன் அளிக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இந்தியாவுக்கு 5.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் 6 நீர்மூழ்கி கப்பல்களை விற்பது தொடர்பாகவும், ஸ்கால்ஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவில் 1,800 ஜெர்மன் நிறுவனங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் நம்பிக்கையுடன், பசுமை தொழில் நுட்பத்தில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் குழுவுடன் ஜெர்மன் பிரதமர் ஸ்கால்ஸ் இந்தியா வந்துள்ளார்.

இந்தியாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் ஆர்வம் இருந்தாலும், விதிமுறைகள், தொழில் ரீதியிலான தடைகள் போன்றவை ஜெர்மனி நிறுவனங்களுக்கு இந்திய சந்தை சவால் ஆனதாகவே இருக்கும். அதனால் ஜெர்மனியின் முக்கிய கார் நிறுவனங்கள் எதுவும் இந்த குழுவில் இடம் பெறவில்லை.

சீனா மற்றும் ரஷ்யாவுடன் ஜெர்மனி வர்த்தக உறவு வலுவாக இருந்தது. ஜெர்மனியின் இயந்திரங்களை சீனா அதிகளவில் வாங்கியது. ஜெர்மனிக்கு முக்கிய எரிசக்தி விநியோகிப்பாளராக ரஷ்யா இருந்து வந்தது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக விநியோக சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த ஜெர்மனி விரும்புகிறது. அதே நேரத்தில் ரஷ்ய ஊடுருவலுக்கு இந்தியா தனது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என ஜெர்மன் வலியுறுத்தவில்லை.

இதுகுறித்து ஜெர்மன் குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரி கூறுகையில், ‘‘ஒவ்வொரு நாட்டுக்கும் சொந்த கருத்து உள்ளது. அவர்கள் தங்களுக்கான வெளியுறவுக்கு கொள்கையை பின் பற்றுகின்றனர். ரஷ்யாவில் இருந்து பெறப்படும்எரிபொருளுக்கு இந்தியா குறைவாக பணம் செலுத்துகிறது. இந்தியர்கள் அதை விரும்புகின்றனர். ரஷ்யா குறைவான தொகையை பெறுகிறது அதை நாங்கள் விரும்புகிறோம். ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா போல் மற்ற நாடுகளும் ரஷ்யாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதை எதிர்பார்க்க முடியாது’’ என்றார்.

சீன அதிபரை சந்திக்க ஜெலன்ஸ்கி திட்டம்: ரஷ்யா-உக்ரைன் இடையே அமைதி பேச்சுவார்த்தையை தொடர 12 அம்ச திட்டத்தை சீனா நேற்று முன்தினம் அறிவித்தது. ரஷ்யா-உக்ரைன் போர் ஏற்பட்டு ஓராண்டு நிறைவு நாளில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அளித்த பேட்டியில் கூறியதாவது:

உக்ரைன் பற்றி சீனா பேசத் தொடங்கியுள்ளது. இது நல்ல விஷயம் என நினைக்கிறேன். இதில் அடுத்த கட்ட நடவடிக்கைகள்தான் முக்கியம். இது தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். இது இரு நாடுகளுக்கும், உலகின் பாதுகாப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். இந்த அமைதி பேச்சுவார்த்தை திட்டங்கள் சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே சீனாவுடன் இணைந்து செயல்படுவேன். இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறினார். சீனாவின் அமைதி திட்டத்தை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகமும் வரவேற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x