Published : 25 Feb 2023 05:14 PM
Last Updated : 25 Feb 2023 05:14 PM

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர எவ்வித அமைதிப் பேச்சுவார்த்தையிலும் இணைய இந்தியா தயார்: பிரதமர் மோடி

புதுடெல்லி: “உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர எந்தவொரு அமைதி பேச்சுவார்த்தையிலும் இணைய இந்தியா தயார்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஸ்கோல்ஸ், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அவரது உரையில் உக்ரைன் போரே முக்கிய இடம் பெற்றிருந்தது. ரஷ்யா - உக்ரைன் மோதல் காரணமாக உலகம் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக அவர் வேதனை தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட தனிப்பட்ட முறையில் முயற்சி செய்து அதனை உறுதிப்படுத்தப் போவதாகவும் ஓலஃப் ஸ்கோல்ஸ் உறுதி அளித்தார்.

இந்த சந்திப்பின்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ''கரோனா பெருந்தொற்று மற்றும் உக்ரைன் மோதல் காரணமாக ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வளரும் நாடுகள் எதிர்மறை பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. கூட்டு முயற்சியின் மூலமாகவே இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்பதையும், ஜி20 மாநாட்டில் இதற்கு முக்கியத்துவம் அளிப்பது எனவும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.

உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தையும் தூதரக அணுகுமுறையும் மிகவும் அவசியம் என்பதை இந்தியா தொடக்கம் முதலே கூறி வருகிறது. போரை முடிவுக்குக் கொண்டு வர எந்தவொரு அமைதி பேச்சுவார்த்தையிலும் இணைய இந்தியா தயாராக இருக்கிறது.

ஐ.நா பாதுகாப்பு அவை சீர்திருத்தப்பட வேண்டும். சர்வதேச யதார்த்தத்தை பிரதிபலிக்கக்கூடியதாக சர்வதேச பொது அவை இருப்பது மிகவும் முக்கியம். ஜி4 நாடுகளின் கூட்டமைப்பு ஐநா பாதுகாப்பு அவையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது'' என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஜி20 தலைமையை இந்தியா ஏற்றிருப்பதற்கு ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஸ்கோல்ஸ் வாழ்த்து தெரிவித்தார். ''மிக கடினமான காலத்தில் ஜி20 தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்தியாவுக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. இதை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். அதேநேரத்தில், இந்தியா தனது பொறுப்பை உணர்ந்து செயல்படும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன். உக்ரைன் போரால், உலகில் எந்த ஒரு நாடும் உணவுக்காகவோ, எரிபொருளுக்காகவோ தவிக்கக் கூடாது.

இந்தியாவில் நிறைய திறைமையான நிறுவனங்கள் இருக்கின்றன. இந்தியாவின் திறமையால் பலனடைய நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவின் திறன்மிகு நிறுவனங்களையும், தனி நபர்களையும் ஈர்க்கவே ஜெர்மனி விரும்புகிறது'' என ஓலஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x