டெல்லியில் 948 லிட்டர் கலப்பட நெய் பறிமுதல்: தீபாவளியை முன்னிட்டு அரசு தீவிர நடவடிக்கை

டெல்லியில் 948 லிட்டர் கலப்பட நெய் பறிமுதல்: தீபாவளியை முன்னிட்டு அரசு தீவிர நடவடிக்கை
Updated on: 
2 min read

புதுடெல்லி: “டெல்லியில் தீபாவளியை முன்னிட்டு உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வோருக்கு எதிரான நடவடிக்கைகளை மாநில பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை இனிப்பு பலகாரம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 948 லிட்டர் கலப்பட நெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி உணவுப் பாதுகாப்புத் துறை நடத்திய அதிரடி சோதனையில், நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 948.9 லிட்டர் கலப்பட நெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாநில முதல்வர் ரேகா குப்தாவின் அறிவுறுத்தலின் பேரில், உணவுப் பாதுகாப்புத் துறைக் குழுவினர் தென்கிழக்கு டெல்லியில் அதிரடி சோதனை நடத்தினர்.

பண்டிகைக் காலத்தையொட்டி உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதைத் தடுப்பதற்காகத் தொடர்ந்து நடைபெற்று வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தச் சோதனைகள் அமைந்தன. போகல் சந்தையில் இருந்து 389.9 லிட்டர் நெய்யும், நஜாஃப்கர் சந்தையில் இருந்து 338 லிட்டர் நெய்யும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், ஷிவ் விஹாரில் டெல்லி காவல் துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட சோதனையில், கூடுதலாக 221 லிட்டர் நெய் கைப்பற்றப்பட்டுள்ளது. போகல் மற்றும் நஜாஃப்கர் பகுதிகளில் இருந்து மொத்தம் 15 நெய் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை உணவுப் பாதுகாப்புத் தரநிலைகளின்படி பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. டெல்லியில் உணவுப் பாதுகாப்புத் துறையின் ஆய்வு முறையை நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாதிரிகளை விரைவாகப் பரிசோதிக்கவும், முறைகேடுகள் கண்டறியப்படும் இடங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் முடியும் என டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

துறையின் பணியாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேவைப்பட்டால் பிற துறைகளில் இருந்தும் பணியாளர்களை ஈடுபடுத்தி, இந்த விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையைத் தலைநகரின் கூடுதல் பகுதிகளுக்கு விரிவுபடுத்த டெல்லியில் ஆளும் பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களிடையே தீவிர விழிப்புணர்வு பிரச்சாரமும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம், சாதாரண நுகர்வோர்களே சந்தேகத்திற்குரிய பொருட்களை அடையாளம் கண்டு, அது குறித்து புகார் அளிக்க முடியும். இது வெறும் பண்டிகைக் காலத்திற்கு மட்டுமான நடவடிக்கை மட்டுமின்றி, கலப்படத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என டெல்லி அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, பண்டிகைக் காலங்கள் முடிந்ததும் நின்றுவிடாமல், ஆண்டு முழுவதும் தொடர்ந்து தீவிரமாகச் செயல்படுத்தப்பட உள்ளது. உணவுப் பொருட்களில் கலப்படம், தரம் குறைபாடு அல்லது காலாவதியான பொருட்களை விற்பனை உள்ளிட்ட புகார்கள் மீது நேரடியாகத் தெரிவிக்க துறையின் உதவி எண் 1800-11-3921 அளிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா கூறுகையில், ‘உணவின் தூய்மை என்பது ஒவ்வொரு குடிமகனின் ஆரோக்கியம், நம்பிக்கை மற்றும் பாதுகாப்புடன் நேரடியாகத் தொடர்புடையது. மக்கள் எவ்வித அச்சமும் இன்றி, உணவின் தரம் குறித்து முழு நம்பிக்கையுடன் பொருட்களை வாங்குவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் பொறுப்பு.

கலப்படம் நடந்த பிறகு அதைக் கண்டறிவது மட்டுமல்லாமல், முறையான கண்காணிப்பு, நவீன பரிசோதனை வசதிகள், போதுமான பணியாளர்கள் மற்றும் துரிதமான சட்ட அமலாக்கம் ஆகியவற்றின் மூலம், உணவு நுகர்வோரின் தட்டுக்குச் சென்றடைவதற்கு முன்பே கலப்படத்தைத் தடுக்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கம்’ என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.

டெல்லியில் 948 லிட்டர் கலப்பட நெய் பறிமுதல்: தீபாவளியை முன்னிட்டு அரசு தீவிர நடவடிக்கை
7 வயதில் மீட்கப்பட்ட இலங்கை இளைஞர் அடையாள அட்டை கேட்டு கண்ணீர் @ ஈரோடு

X