Published : 15 Feb 2023 05:03 AM
Last Updated : 15 Feb 2023 05:03 AM

பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஏர் இந்தியா 250 ஏர்பஸ் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் - முழு விவரம்

ஏர்பஸ் விமானங்கள் வாங்குவதற்காக, ஏர்இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்ட நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்.

புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்கள் வாங்க ஏர் இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர்.

பொதுத் துறை நிறுவனமாக செயல்பட்டுவந்த ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை, கடந்த 2022-ம் ஆண்டு டாடா குழுமம் வாங்கியது. இதைத் தொடர்ந்து, ஏர் இந்தியாவின் செயல்பாட்டை மேம்படுத்திவரும் டாடா குழுமம், ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

காணொலி வாயிலாக நடைபெற்றஇந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் கலந்துகொண்டனர். அப்போது, இந்த ஒப்பந்தத்தை முக்கியநிகழ்வு என்று பிரதமர் மோடி பாராட்டினார். தொடர்ந்து, அவர் கூறியதாவது:

நாட்டின் பாதுகாப்பு, உணவு, சுகாதார பாதுகாப்பு, இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் சுமுகநிலை ஆகியவற்றுக்கு இந்தியாவும், பிரான்ஸும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன.

இந்த சூழலில், தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது, இந்தியா –பிரான்ஸ் இடையிலான வலுவான உறவை மட்டுமின்றி, இந்திய விமானத்துறையின் வெற்றியையும் காட்டுகிறது.

நாட்டு வளர்ச்சியின் ஓர் அங்கமாக விமானத் துறை உள்ளது. இத்துறையை வலுப்படுத்துவது நாட்டின் உள்கட்டமைப்பு கொள்கையின் முக்கிய அம்சமாக உள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74-ல் இருந்து 147 ஆக அதிகரித்துள்ளது. விமானத் துறையில் உலகின் 3-வது பெரிய நாடாக இந்தியா விரைவில் மாறும்.

விமான பராமரிப்பு, சரிபார்ப்பு, செயல்பாடுகளுக்கான தளமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. தற்போது அனைத்து சர்வதேச விமான நிறுவனங்களும் இந்தியாவில் உள்ளன. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் விமான உற்பத்தியில் நிறைய வாய்ப்பு உள்ளது. உலக நாடுகள் இதைபயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பிரதமர் கூறினார்.

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறும்போது, ‘‘இந்தியா – பிரான்ஸ் உறவில் இந்த ஒப்பந்தம் ஒரு மைல்கல். இந்தியாவுக்கு சிறந்த தொழில்நுட்பத்தை வழங்க வேண்டும் என்பதில் பிரான்ஸ் உறுதிகொண்டுள்ளது. இந்தியாவின் சிறந்த வளர்ச்சிக்கு ஏர்பஸ் சிறந்த பங்களிப்பு வழங்கும்” என்றார்.

டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் கூறியபோது, ‘‘ஏர் இந்தியா நிறுவனம் மாபெரும் மாற்றத்துக்கு உள்ளாகி வருகிறது. உலகத் தரத்திலான கட்டமைப்பை இங்கு உருவாக்கி வருகிறோம். ஏர் இந்தியா சேவையை விரிவுபடுத்த, ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து40 அகன்ற விமானங்கள், 210 குறுகிய விமானங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளோம்’’ என்றார். அகன்ற விமானங்கள் 16 மணி நேரத்துக்கு மேற்பட்ட நீண்டதூர பயணத்துக்கு பயன்படுத்தப்படுபவை.

ஏர் இந்தியா புதிய விமானங்கள் வாங்கி 17 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இறுதியாக, 2005-ல் 68 போயிங், 43 ஏர்பஸ் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில், டாடா குழுமம் 250 ஏர்பஸ் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்திருப்பது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x