Last Updated : 13 Feb, 2023 08:21 PM

 

Published : 13 Feb 2023 08:21 PM
Last Updated : 13 Feb 2023 08:21 PM

“சிறுபான்மையினரை வஞ்சிக்கும் பட்ஜெட்” - மக்களவையில் நவாஸ் கனி காட்டம்

கோப்புப் படம்

புதுடெல்லி: மக்களவையில் பட்ஜெட் மீது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி, “சிறுபான்மையினரை வஞ்சிக்கும் பட்ஜெட்” கடுமையாக விமர்சித்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் மீது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) எம்பியான கே.நவாஸ்கனி உரையாற்றினார். கடந்த பிப்ரவரி 1-ல் சமர்பிக்கப்பட்ட 2023-2024 நிதியாண்டிற்கான பட்ஜெட் மீதான விவாதத்தில் ஐயூஎம்எல் கட்சியின் துணைத் தலைவரும் ராமநாதபுரம் தொகுதியின் எம்பியுமான நவாஸ்கனி எம்.பி பேசியது: ''நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும்பொழுது ஒரு பெரும் வளர்ச்சி பெரும் சாதனை என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயன்றார். ஆனால், நீங்கள் காட்டிய அந்த வளர்ச்சி, தோற்றம் எல்லாம் நீங்கள் மதுரையில் தந்த எய்ம்ஸ் மருத்துவமனையை போல வெற்றிடமாக மட்டுமே உள்ளது என்பதை பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த நிதிநிலை அறிக்கை ஏழை, எளிய நடுத்தர வர்க்க மக்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்துகிற அறிக்கையாகவே பார்க்க முடிகிறது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக ஆகிக்கொண்டே செல்கிறார்கள். ஏழைகள் மேலும் ஏழைகளாகி வருகிறார்கள். இதுதான் உங்கள் ஆட்சியின் கடந்த 8 ஆண்டு கால சாதனை ‌.இந்த அரசு சிறுபான்மை மக்களை தொடர்ந்து வஞ்சிக்கக் கூடிய அரசு என்பதை வழக்கம்போல இந்த பட்ஜட்டிலும் நிரூபித்து விட்டது.

சிறுபான்மை மக்கள் மட்டுமல்ல எஸ்சி, எஸ்டி, ஓபிசி என இதர சமூக மக்களுக்கான திட்டங்கள் பலவற்றுக்கு நிதியை குறைத்து அவர்களுக்கு துரோகம் இழைக்கும் பட்ஜெட் ஆகவும் இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது. பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் என நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பொருளாதார ஆய்வு அறிக்கையில் பணவீக்கம் நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டி 6.8 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. அது மட்டுமல்ல, ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு குறைந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் நிதியமைச்சர் அவர்கள் எப்படி 7 சதவிகிதப் பொருளாதார வளர்ச்சி இலக்கை அடைய முடியும் என்று தெரியவில்லை. வழக்கம்போல ஒரு மாயத் தோற்றத்தை பாஜக அரசு சிறப்பாக காட்டி இருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு எந்தவித புதிய திட்ட அறிவிப்பும் இன்றி எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பாரபட்சமாய் தமிழ்நாட்டிற்கு நீங்கள் செய்யும் அநீதிக்கு தமிழ்நாடு மக்கள் உங்களுக்கு தொடர்ந்து பாடம் புகட்டி வருகிறார்கள். தொடர்ந்து புகட்டுவார்கள். தேர்தல் நடைபெற இருக்கக் கூடிய மாநிலங்களை மட்டுமே குறிவைத்து வளர்ச்சி திட்டங்கள் நிதி உதவிகள் வழங்கியுள்ளீர்கள். நீங்கள் அடுத்த தேர்தலை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுபவர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்து விட்டீர்கள். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் இன்று நாட்டில் அதிகமான வேலை வாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், அவற்றின் மேம்பாட்டிற்கு 15 சதவீதத்திற்கு மேல் ஜிஎஸ்டி வரி கூடாது என்று தொடர்ந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கையை இந்த அரசு நிறைவேற்ற மறுக்கிறீர்கள். சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்க ஒன்பது கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறீர்கள். இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் சிறுகுறு தொழில்களுக்கு நீங்கள் வழங்கும் முக்கியத்துவம் இதுதான் என்பது மிகப்பெரிய கவலை அளிக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என நிதியமைச்சர் கூறியிருக்கிறார். நிதியமைச்சரே, கடந்த 2014-இல் நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்ததிலிருந்து வெறும் அறிவிப்பை மட்டும் எந்தவித குறையும் இன்றி அறிவித்துக் கொண்டே இருக்கிறீர்கள். இவற்றை எப்போது நிறைவேற்ற போகிறீர்கள்?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்பது கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை தாங்கி பிடிக்கும் அளவில் கொண்டுவரப்பட்ட திட்டம். நிலம் இல்லாத மக்களுக்காக வழங்கப்படும் அந்த திட்டத்தில் வேலை நாட்களை 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும். அவர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் எல்லாம் கோரிக்கை வைத்து வருகிறோம். இந்நிலையில், அதற்கான நிதியை ரூ.80 ஆயிரம் கோடியிலிருந்து 20 ஆயிரம் கோடி குறைத்து இருப்பது என்பது அந்தத் திட்டத்தை குழி தோண்டி புதைக்கக்கூடிய செயலாக இருக்கும். நிச்சயமாக அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் இந்த அரசின் போக்கு இந்த நிதிநிலை அறிக்கையிலும் பிரதிபலிக்கிறது. சிறுபான்மை நலத்துறைக்கு கடந்த ஆண்டு ரூ.5,020 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டு 3097 கோடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட ரூ.2,000 கோடி நிதி குறைக்கப்பட்டிருக்கிறது. சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் பிரீ மெட்ரிக் உதவித்தொகைக்கான நிதி சுமார் ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது.

சிறுபான்மை ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் மவுலானா அபுல் கலாம் ஆசாத் தேசிய கல்வி ஆராய்ச்சி உதவித்தொகை முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. சிறுபான்மை மாணவர்கள் ஆராய்ச்சி கல்வி கற்பதை தடுக்க கூடிய அரசாக இந்த அரசு இருக்கிறது'' என்று அவர் நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x