ராகுல் விமர்சனம் முதல் துருக்கி நிலவரம் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.7, 2023

ராகுல் விமர்சனம் முதல் துருக்கி நிலவரம் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.7, 2023
Updated on
3 min read

துருக்கி, சிரியா பூகம்ப பலி 5,000-ஐ கடந்தது: துருக்கியில் திங்கள்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தால் அண்டை நாடான சிரியாவிலும் சேர்த்து இதுவரை 5000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் 5.6 ரிக்டராக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்லும் சூழலில் மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து துருக்கி சுகாதார அமைச்சர் ஃபரத்தீன் கோக்கோ கூறுகையில், கடுமையான பனிப்பொழிவு காரணமாக மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பூகம்பத்தின் தாக்கமும் அதிகமாக இருப்பதால் மீட்புப் படைகளுக்கு அது சவாலாக உள்ளது என்றார்.

பூகம்பத்தால் உலுக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் 5600 கட்டிடங்கள் தரைமட்டமாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் பல கட்டிடங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.

துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா: இந்திய விமானப் படையைச் சேர்ந்த மேலும் 2 விமானங்களில் மீட்புப் படையினரையும், நிவாரணப் பொருட்களையும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு இந்தியா அனுப்புகிறது.

முன்னதாக, நிலநடுக்கம் குறித்த தகவல் அறிந்ததும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிக்க இந்தியா தயார் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அவரது அறிவிப்பை அடுத்து, இந்தியா சார்பில் இந்திய விமானப்படை விமானம் மூலம் 100 பேர் அடங்கிய மீட்புப் படையினர், மீட்புக்கான பொருட்கள், மோப்ப நாய்கள், மருத்துவக் குழுவினர், மருந்து பொருட்கள் துருக்கிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த விமானப்படை விமானம், துருக்கியின் அதானா விமான நிலையத்தை அடைந்துவிட்டதாக செவ்வாய்க்கிழமை நண்பகல் அறிவிக்கப்பட்டது.

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக விக்டோரியா கவுரி பதவியேற்பு: விக்டோரியா கவுரிக்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக அவர் பதவியேற்றார்.

கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் விக்டோரியா கவுரி பேசிய வீடியோ ஆதாரத்தை சுட்டிக்காட்டி, அவரை நீதிபதியாக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் இருவர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக திங்கள்கிழமை அறிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்கும் என கூறி இருந்தார்.

அதன்படி, இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், விக்டோரியா கவுரிக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தனர். இதனிடையே, திட்டமிட்டபடி விக்டோரியா கவுரி செவ்வாய்க்கிழமை காலை கூடுதல் நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.

சிவில் சர்வீஸ் தேர்வு வயது வரம்பு: பிரதமருக்கு மோடி கடிதம்: ககரோனா பெருந்தொற்று காலத்தில், குடிமைப் பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு, வயது வரம்பினைத் தளர்த்தும் ஒருமுறை நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்குக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "குடிமைப் பணித் தேர்வுகள் உட்பட, ஒன்றிய அரசால் நடத்தப்பட்ட பல்வேறு ஆட்சேர்ப்புத் தேர்வுகளுக்கான வயது வரம்பை கரோனா பெருந்தொற்றுக் காலங்களில் தவறவிட்ட தேர்வர்கள், ஒருமுறை நடவடிக்கையாக தங்களின் வயது வரம்பை நீட்டிக்க வேண்டுமென்று கோரி வைத்துள்ளனர். அவர்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து 3 ஆண்டுகள் தளர்வு மேற்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்: ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அழைப்பு இல்லாததால், வேட்புமனு தாக்கலின்போது பாஜகவினர் பங்கேற்கவில்லை.

வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தனது வேட்புமனுவை, தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமாரிடம் தாக்கல் செய்தார். இந்த நிலையில், வேட்புமனு தாக்கலின்போதும் பாஜக நிர்வாகிகளுக்கு அதிமுகவினர் அழைப்பு விடுக்கவில்லை. இதனால், கூட்டணிக் கட்சியான தமாகாவின் யுவராஜ் மட்டும் வேட்புமனு தாக்கலின்போது உடனிருந்தார்.

அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு: அண்ணாமலை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவு அளிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவிற்கு பாஜக தனது முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சட்டபூர்வ அதிமுக வேட்பாளரை நிறுத்தி இருக்கும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், பொது நலன் கருதி, கூட்டணியின் நன்மை கருதி தங்களின் வேட்பாளரை வாபஸ் பெற்று இருக்கும் ஓ.பன்னீர்செல்வதத்திற்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். திமுக அரசை வீழ்த்த ஓர் அணியில் திரண்டிருக்கும் நாம் அனைவரும் தென்னரசுவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் - இபிஎஸ் நேரில் சந்திப்பு? - கு.ப கிருஷ்ணன் பேட்டி : ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்றார்.

இதற்கிடையில் மதுரை செல்வதற்காக விமான நிலையம் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கச் செல்வதற்கு முன்பு முறையாக அதுகுறித்து அறிவிப்பேன்” என்று தெரிவித்தார்.

அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் ராகுல் விமர்சனம்: குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “தமிழ்நாடு முதல் இமாச்சலப் பிரதேசம் வரை எங்கு பார்த்தாலும் ஒரே ஒரு பெயர்தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அது அதானி என்ற பெயர். அதானியால் எவ்வாறு எல்லா தொழில்களிலும் ஈடுபடவும் வெற்றிபெறவும் முடிகிறது என மக்கள் கேட்கிறார்கள்.

குஜராத் முதல்வராக இருந்தபோதுதான் நரேந்திர மோடிக்கு அதானியுடன் தொடர்பு ஏற்படுகிறது. மோடிக்கு அவர் பக்கபலமாக; நம்பிக்கைக்கு உரியவராக மாறுகிறார். குஜராத்தின் மறுமலர்ச்சிக்கு உதவுகிறார். ஆனால், உண்மையான ஆச்சரியம், நரேந்திர மோடி 2014-ல் பிரதமராக டெல்லிக்கு வந்த பிறகுதான் நிகழ்கிறது.

விமான நிலையத்தை மேம்படுத்துவதில் அனுபவம் இல்லாதவர்களிடம் அதற்கான பணி ஒப்படைக்கப்பட மாட்டாது என ஒரு விதி உள்ளது. ஆனால், இந்த விதியை மத்திய அரசு மாற்றுகிறது. அதானி வசம் 6 விமான நிலையங்கள் ஒப்படைக்கப்படுகின்றன. நாட்டின் மிகவும் லாபகராமான மும்பை விமான நிலையமும் அவருக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல், பாதுகாப்புத் துறையில் அதானிக்கு எவ்வித முன் அனுபவமும் இல்லை. ஆனால், 126 போர் விமான உற்பத்திக்கான ஒப்பந்தம் HAL நிறுவனத்தின் மூலம் அதானிக்கு வழங்கப்படுகிறது. இவை மட்டுமல்ல. பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றால், அந்த நாட்டிலும் அதானிக்கு தொழில் ஒப்பந்தம் கிடைக்கிறது” என்று ராகுல் காந்தி பேசினார்.

“நான் மீளவில்லை” - சல்மான் ருஷ்டி: பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கடந்த ஆகஸ்டு மாதம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஓர் இலக்கிய நிகழ்வில் பேசிக்கொண்டு இருக்கும்போது தாக்குதலுக்கு உள்ளானார். இந்தத் தாக்குதலில் சல்மான் ருஷ்டி ஒரு கண் பார்வையை இழந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், 5 மாதங்களுக்குப் பிறகு பிரபல பத்திரிகை நிறுவனத்துக்கு சல்மான் ருஷ்டி நேர்காணல் அளித்துள்ளார்.

அதில் அவர், “அந்தத் தாக்குதல் என்னை மனரீதியாக பாதித்தது. நான் மீண்டும் எழுதுவது மிகவும் கடினமாக இருந்தது. நான் எழுத உட்காருவேன், ஆனால் எதுவுமே நடக்காது. நான் எழுதுவேன், ஆனால் அவை எல்லாம் வெறுமையாக இருந்தது. அடுத்த நாள் அவற்றைக் குப்பைத் தொட்டியில் தூக்கி போட்டுவிடுவேன். உண்மையில் அந்த சம்பவத்திலிருந்து நான் வெளியேவரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

70 நாட்களாக நடக்கும் விவசாயிகள் போராட்டம்: திருமண்டங்குடியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்கம் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 70 நாட்களாக ஆலை முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு கண்டுகொள்ளாததால், 15-ம் தேதி வரை கிராமங்கள் தோறும் தெருமுனைக் கூட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in