Published : 07 Feb 2023 11:04 AM
Last Updated : 07 Feb 2023 11:04 AM
சென்னை: “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கச் செல்வதற்கு முன்பு முறையாக அறிவிப்பேன்” என்று ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
விமானம் மூலம் மதுரைக்கு செல்லும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பசுமைவழிச் சாலை இல்லத்தில் இருந்து புறப்பட்டார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர் குப.கிருஷ்ணன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் விலகிய செந்தில்முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மதுரை செல்வதற்காக விமான நிலையம் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ”ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கச் செல்வதற்கு முன்பு முறையாக அதுகுறித்து அறிவிப்பேன்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிப்.27-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் (பிப்.7) நிறைவடைகிறது. ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்து, பிரச்சாரம் செய்து வருகிறார்.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பில் கே.எஸ்.தென்னரசும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில்முருகனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இருவரும் வேட்பாளரை நிறுத்தினால் ‘இரட்டை இலை’ சின்னம் முடங்கும் அபாயம் உள்ள நிலையில், சின்னத்தை தனக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இதில், இரு தரப்பினரும் கலந்துபேசி, பொதுக்குழு மூலமாக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதுதொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு, அவர்களது ஒப்புதல் கடிதங்கள் பெறப்பட்டன. தமிழ்மகன் உசேன் நேற்று (பிப்.6 ) டெல்லி சென்று, தேர்தல் ஆணையத்தில் அவற்றை தாக்கல் செய்தார். இதற்கிடையே, தங்கள் தரப்பில் மனு தாக்கல் செய்த வேட்பாளர் செந்தில் முருகன் வேட்பு மனுவை வாபஸ் வாங்குவார் என்று ஓபிஎஸ் தரப்பு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT