ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவு: பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

அண்ணாமலை | கோப்புப் படம்
அண்ணாமலை | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவு அளிப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தென்னரசை ஆதரித்து 2,501 பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இதுதொடர்பான ஆவணங்களை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நேற்று (பிப்.7) தாக்கல் செய்தார். இதற்கிடையே, தங்கள்தரப்பில் மனுதாக்கல் செய்த வேட்பாளர் செந்தில் முருகன் வேட்புமனுவை வாபஸ் வாங்குவார் என்று ஓபிஎஸ் தரப்பு நேற்று (பிப்.7) அறிவித்தது.

இந்நிலையில் தென்னரசுவிற்கு முழு ஆதரவை வழங்குவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவிற்கு பாஜக தனது முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சட்டபூர்வ அதிமுக வேட்பாளரை நிறுத்தி இருக்கும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், பொது நலன் கருதி, கூட்டணியின் நன்மை கருதி தங்களின் வேட்பாளரை வாபஸ் பெற்று இருக்கும் ஓ.பன்னீர் செல்வதத்திற்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். திமுக அரசை வீழ்த்த ஓர் அணியில் திரண்டிருக்கும் நாம் அனைவரும் தென்னரசுவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in