துருக்கி, சிரியா பூகம்பம் முதல் நாடாளுமன்ற முடக்கம் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.6, 2023

துருக்கி, சிரியா பூகம்பம் முதல் நாடாளுமன்ற முடக்கம் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.6, 2023
Updated on
3 min read

துருக்கி, சிரியாவில் பயங்கர பூகம்பம்: துருக்கி, சிரியா நாடுகளில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட பூகம்பத்தால் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டேப் நகரில் பூமிக்கு அடியில் 11 மைல் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், திங்கள்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டத்தில் இருந்து சரியாக 15 நிமிடங்கள் இடைவெளியில் இன்னொரு சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. அது 6.7 ரிக்டர் என்றளவில் இருந்தது.

காசியான்டேப் நகரம் சிரிய எல்லையை ஒட்டியுள்ள நகரமாகும். தொழில் நகரமாக இது அறியப்படுகிறது. இந்த நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் அருகிலிருக்கும் லெபனான், சைப்ரஸ், சிரியா நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இதில் சிரியாவில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருநாடுகளிலும் இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், துருக்கி அதிபர் எர்டோகன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு, நிவாரணக் குழுக்கள் உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த பேரிடரில் இருந்து குறைந்த சேதாரத்துடன் நிச்சயமாக மீண்டு வருவோம் என நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பூகம்பத்தில் விழுந்து நொறுங்கிய கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

“துருக்கி மக்களுக்கு உதவத் தயார்” - பிரதமர் மோடி: ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் 'இந்திய எரிசக்தி வாரம் 2023' நிகழ்ச்சியை பெங்களூருவில் நடந்தது. அதனைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “துருக்கியில் நேரிட்ட நிலநடுக்கத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பலர் படுகாயமடைந்துள்ளனர். ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. துருக்கியின் அண்டை நாட்டையும் இந்த நிலநடுக்கம் பாதித்துள்ளது. இந்த சூழலில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இந்தியாவின் 140 கோடி மக்களின் அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது” என தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு நிவாரணத் தொகுப்பு அறிவிப்பு: பருவம் தவறிய கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, 33 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் ஹெக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பினை வழங்கிடவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட்ட அமைச்சர்கள் குழு தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அறிக்கையை சமர்ப்பித்தனர்.

குட்கா முறைகேடு வழக்கு: கால அவகாசம் கோரிய சிபிஐ: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையில் உள்ள பிழையை திருத்தம் செய்யும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்பதால் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என சிபிஐ தரப்பில் சென்னை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்: ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என்று ஓபிஎஸ் அணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறுகையில், "இரட்டை இலை வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுகிறார். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் இரட்டை இலை வெற்றி பெற பிரச்சாரம் செய்வோம். தென்னரசுக்கு அல்ல. இபிஎஸ் அறிவித்த வேட்பாளருக்கு பிரச்சாரம் இல்லை. இரட்டை இலைக்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்வோம்" என்று அவர் கூறினார்.

அதிமுகவில் தென்னரசுக்கு பெரும்பாலான ஆதரவு: அதிமுகவில் உளள 2,646 பொதுக் குழு உறுப்பினர்களில் 2,501 பேர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தந்த வேட்பாளர் ஒப்புதல் படிவங்களை அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் திங்கள்கிழமை தேர்தல் ஆணையத்தில் சமர்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், "உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சுற்றறிக்கை மூலம் பொதுக் குழு கூட்டப்பட்டது. தென்னரசுக்கு எதிராக ஒரு வாக்கு கூட வரவில்லை. ஆனால், 145 உறுப்பினர்கள் வாக்குகளை பதிவு செய்யவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தேர்தல் ஆணையத்தில் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் ஆவண செய்வதாக தெரிவித்துள்ளது" என்று அவர்கள் தெரிவித்தனர்.

அதானி விவகாரம் முதல் மத்திய பட்ஜெட் வரை: சோனியா தாக்கு: மத்திய அரசின் பட்ஜெட், ஏழைகள் மீதான அமைதித் தாக்குதல் என்று காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சோனியா காந்தி விமர்சித்துள்ளார். உலகின் குரு, அமிர்த காலம் என்றெல்லாம் கூறிக்கொண்டே, நடுத்தர மக்களின் சேமிப்புகளை தங்களுக்கு வேண்டிய தொழிலதிபர்களின் நிறுவனங்களுக்கு வாரி வழங்கும் நடவடிக்கைகளை பிரதமரும் அவரது அமைச்சர்களும் செய்து வருவதால், பாதிக்கப்படும் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமான தொழிலதிபர் என்று அதானியை குறிப்பிட்டுள்ள சோனியா காந்தி, அதானியின் நிதி முறைகேடுகள் வெளியாகி உள்ளன என்றும், தனது பணக்கார நண்பர்களுக்கு சாதகமாக செயல்படுவதே பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கை என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும், மத்திய அரசின் 2023-24 பட்ஜெட், ஏழைகள் மீதான நரேந்திர மோடி அரசின் அமைதித் தாக்குதல் என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

3-வது நாளாக நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு: அதானி விவாகரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பியதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

சென்னை மெட்ரோ பணிகளால் போக்குவரத்து நெரிசல்: சென்னை மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் இன்னும் ஓராண்டில் குறைக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார். மேலும், வாட்ஸ்ஆப் மூலம் மெட்ரோ பயணச்சீட்டு வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்றாவாது முறையாக கிராமி விருது வென்றார் ரிக்கி கேஜ்: பெங்களூருவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக கிராமி விருதினை வென்று சாதனை படைத்துள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in