

புதுடெல்லி: துருக்கியில் பூகம்பம் காரணமாக இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கவும், மருத்துவ மற்றும் நிவாரண உதவிகளை வழங்கவும் அந்நாட்டிற்கு மீட்புப் படை, மருத்துவக் குழு மற்றும் நிவாரணப் பொருட்கள் ஆகியவற்றை இந்தியா அனுப்பிவைக்க உள்ளது.
துருக்கியின் தென் மத்திய பகுதியில் உள்ள கசியான்டெப் நகருக்கு அருகே உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவாகியது. இதில், இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பலர் இன்னமும் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நில அதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்டு வந்த நிலையில் மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகி உள்ளது. இந்த தொடர் நிலநடுக்கங்கள் சிரியா, லெபனான், சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், இராக், ரொமானியா, ஜார்ஜியா, எகிப்து ஆகிய நாடுகளிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளன.
இந்நிலையில், இன்று காலை பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என கூறி இருந்தார். இதையடுத்து, பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே. மிஷ்ரா தலைமையில் இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், அமைச்சரவை செயலாளர், உள்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம், விமான போக்குவரத்துத்துறை, சுகாதாரத்துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 100 வீரர்கள் அடங்கிய மீட்புக் குழுவும், மருத்துவக் குழுவும் தனி விமானத்தில் துருக்கிக்கு அனுப்பிவைக்க முடிவெடுக்கப்பட்டது. மீட்புப் படையினருக்குத் தேவையான உபகரணங்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவையும் அனுப்பிவைக்க திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 100 வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படையும், மருத்துவக் குழுவும் தயார் நிலையில் உள்ளன. நிவாரணப் பொருட்களும் தயார் நிலையில் உள்ளன. துருக்கி அரசும், அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகமும் ஒருங்கிணைத்து நிவாரணப் பொருட்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.