குட்கா முறைகேடு: திருத்திய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய சிபிஐ 

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
2 min read

சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையில் உள்ள பிழையை திருத்தம் செய்யும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்பதால் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என சிபிஐ தரப்பில் சென்னை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர். இந்த சர்ச்சையில் அப்போதைய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டது.

இந்நிலையில், குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த வழக்கில் கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் சிபிஐ போலீஸார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. அமைச்சர் மற்றும் டிஜிபி என வேறு யாருடைய பெயர்களும் இடம்பெறவில்லை.

இதனிடையே, முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஜூலை 19-ம் தேதி அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து 11 பேருக்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்தக் கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்தும் வழக்கில் உள்ள சாட்சிகள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களின் வாக்குமூலம் தொடர்பான விபரங்களை இணைத்தும், குற்றம்சாட்டபட்டவர்களுக்கு எதிரான விசாரணை அனுமதி தொடர்பான விபரங்களை இணைத்தும், தவறுகளை திருத்தம் செய்து முழுமையாக தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட சிபிஐ நீதிமன்றம், கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐக்கு திரும்ப அளித்தது.

இந்த வழக்கு இன்று (பிப்.6) சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், பிழை திருத்திய குற்றப்பத்திரிகை இன்னும் தயாராகவில்லை. எனவே, கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கு விசாரணை பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in