Published : 02 Feb 2023 05:04 AM
Last Updated : 02 Feb 2023 05:04 AM

தொடர்ந்து 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்த 6-வது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: கடந்த 2019-ல் நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில் தொடர்ந்து 5-வது முறையாக அவர் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன் அருண் ஜேட்லி, ப.சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா, மன்மோகன் சிங், மொரார்ஜி தேசாய் ஆகியோர் தொடர்ந்து 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். 1970-71 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த இந்திரா காந்திக்கு பிறகு இரண்டாவது பெண் என்ற பெருமையை 2019-ல் பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் பெற்றார்.

அந்த ஆண்டு பாரம்பரிய பட்ஜெட் பெட்டியை அவர் அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக தேசிய சின்னத்துடன் கூடிய கோப்பு உறையில் தனது உரை மற்றும் பிற ஆவணங்களை எடுத்து வந்தார். நிர்மலா சீதாராமன் நேற்று மீண்டும் சிவப்பு நிற கோப்பு உறையுடன் அதேநிற சேலை அணிந்துவந்தார். இந்த கோப்பு உறையில் அவர் கடந்த 3 ஆண்டுகளாக காகித உரைக்கு பதிலாக டேப்லட் கணினி எடுத்து வருகிறார்.

கரோனா பரவல் காரணமாக கடந்த 2021 முதல் மத்திய பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட் ஆக மாற்றம் கண்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பட்ஜெட் நகல் டிஜிட்டல் முறையிலேயே விநியோகிக்கப்பட்டது. இவற்றை பதிவிறக்கம் செய்ய பட்ஜெட் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டது.

அப்போது முதல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இருக்கையின் முன் டேப்லட் கணினியை பொருத்தி, அதைப்பார்த்து படித்தவாறு பட்ஜெட்டை சமர்ப்பித்து வருகிறார். ஸ்ரீரங்கத்தை சேர்ந்த தமிழரான நிர்மலா தனது ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலின்போதும் தமிழர்களின் பெருமைகளை எடுத்துரைத்து வந்தார். இதற்காக மன்னர் கால சம்பவங்களையும் திருக்குறளையும் அவர் கூறியதுண்டு. ஆனால் இந்தமுறை ஏனோ அவர் அதுபோன்று எதுவும் கூறவில்லை. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வருவதால் 2024-ல் இவர் தாக்கல் செய்வது இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். கரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழைகளுக்காக இவரால்அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுடன் தொற்றுநோயை நாடு எதிர்கொண்டது. வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் பிரகாசமான இடம் என்ற முத்திரையுடன் இந்தியா தொடர்கிறது.

இதற்கு முன் 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள்: பிரதமர் மோடி தலைமையிலான முதல் அரசில் நிதியமைச்சராக பொறுப்பேற்ற அருண் ஜேட்லி 2014-15 முதல் 2018-19 வரை பட்ஜெட்தாக்கல் செய்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2004-05 முதல் 2008-09 வரை ப.சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்தார். வாஜ்பாய்தலைமையிலான பாஜக அரசில் யஷ்வந்த் சின்ஹா 1998-99-ம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட் மற்றும் இறுதி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

1999-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு அவர் 1999-2000 முதல் 2002-03 வரை 4 பட்ஜெட்களை தாக்கல் செய்தார். நிதியமைச்சராக சின்ஹா பொறுப்பு வகித்தபோது பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரம் மலை 5 மணிக்கு பதிலாக காலை 11 மணி என மாற்றப்பட்டது. நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசில் 1991-92 முதல் 1995-96 வரை மன்மோகன் சிங் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

இவரது முதல் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தாரளமயமாக்கல் உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவுக்கு புதிய திசையைஅளித்தது. முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 10 முறை பட்ஜெட்தாக்கல் செய்துள்ளார். அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 1959-60 முதல் 1963-64 வரை அவர் தொடர்ந்து 5 பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x