Published : 31 Jan 2023 11:42 AM
Last Updated : 31 Jan 2023 11:42 AM

உலகமே இந்தியாவின் பட்ஜெட்டை உற்றுநோக்குகிறது - பிரதமர் மோடி கருத்து

பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: "சர்வதேச அளவில் தற்போது நிலவும் நிச்சியமற்ற தன்மைக்கு மத்தியில், இந்தியா மட்டும் இல்லை, உலகமே இந்தியாவின் பட்ஜெட்டை உற்றுநோக்குகிறது" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. மத்திய பட்ஜெட் நாளை (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்கிறார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று முதல் முறையாக இரண்டு அவைகளில் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நாடாளுன்றத்திற்கு வந்த பிரதமர் மோடி முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: " நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. அதன் தொடக்கத்திலேயே பொருளாதார உலகில் இருந்து நம்பகமான குரல்கள்,நேர்மறையான செய்தியை, நம்பிக்கையின் கீற்றை, உற்சாகத்தின் தொடக்கத்தைக் கொண்டு வந்துள்ளது. இன்று ஒரு முக்கியமான நாள். குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் முதல்முறையாக உரையாற்றி வருகிறார். குடியரசுத்தலைவர் ஆற்றவிருக்கும் இந்த உரை, நம் நாட்டின் அரசியலமைப்புக்கும், குறிப்பாக நாட்டில் பெண்களின் மரியாதைக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

இன்று மொத்த உலகமும் இந்தியாவை பார்த்துக்கொண்டிருக்கிறது. உலக பொருளாதரத்தில் ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவி வரும் சூழலில் இந்திய பட்ஜெட் சாமானியனின் விருப்பங்களை நம்பிக்கைகளை பூர்த்தி செய்யும். இதற்காக உலகம் எதிர்பார்க்கும் நம்பிக்கையின் ஒளி பிரகாசமாக ஒளிர்கிறது. இந்த விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான அனைத்து வேலைகளையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்திருப்பார் என்று நான் நம்புகிறேன்.

நமது நிதியமைச்சரும் பெண்தான். அவர் நாட்டின் முன் இன்னுமொரு பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்யவிருக்கிறார். இன்றைய உலகளாவிய சூழலில் இந்தியா மட்டும் இல்லை உலகமே இந்தியாவின் பட்ஜெட்டை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

நாங்கள் எதிர்கட்சிகளின் குரலை மதிக்கிறோம். எங்களுடையே நோக்கம் ஒன்றே ஒன்றுதான் நாடு முன்னேற வேண்டும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், நாங்கள் ஆழமான விவாதங்களில் ஈடுபடுவோம். நாடாளுமன்ற அவைகளில் ஒவ்வொரு விவகாரம் குறித்தும் சிறப்பாக விவாதிப்போம். அனைத்து எம்.பி.களும் முழு தயாரிப்புடன் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்பார்கள். இந்தக் கூட்டத்தொடர் நாம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது." இவ்வாறு பிரதமர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x