Last Updated : 14 Dec, 2016 03:55 PM

 

Published : 14 Dec 2016 03:55 PM
Last Updated : 14 Dec 2016 03:55 PM

பிரதமரின் தனிப்பட்ட ஊழல் குறித்த தகவல் என்னிடம் இருக்கிறது: ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடியின் 'தனிப்பட்ட ஊழல்' குறித்து விலாவாரியான தகவல் இருக்கிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பண மதிப்பு நீக்கம் குறித்து மக்களவையில் பேச தனக்கு அனுமதி அளிக்கப்பட்டால் அவையில் பூகம்பம் வெடிக்கும் என ராகுல் அண்மையில் கூறியிருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை இன்று (புதன்கிழமை) சந்தித்த அவர், "பிரதமர் நரேந்திர மோடிக்கு என் மீது பயம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே மக்களவையில் நான் வாய் திறந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார். அவரைப் பற்றிய தகவல் என்னிடம் இருக்கிறது. அவற்றை வெளியிட்டால் மோடியின் பிம்பம் சிதறிவிடும்" என்றார்.

'என்ன மாதிரியான தகவல்'

பிரதமர் நரேந்திர மோடி குறித்த தகவல்களை வெளியிடுவேன் என ராகுல் மீண்டும் மீண்டும் கூறிவரும் நிலையில் செய்தியாளர்கள் அவரிடம் எந்த மாதிரியான தகவல்களை வைத்துள்ளீர்கள் என வினவினர். அதற்கு பதிலளித்த ராகுல், "அது பிரதமர் மோடி தொடர்பான தனிப்பட்ட தகவல். அதை நான் மக்களவையில் மட்டுமே தெரிவிப்பேன். பிரதமர் நரேந்திர மோடியின் 'தனிப்பட்ட ஊழல்' குறித்து விலாவாரியான தகவல் எங்களிடம் இருக்கிறது. அதை அவையில் தெரிவிக்கவிடாமல் பிரதமர் எங்களைத் தடுத்து வருகிறார்" என்றார்.

ஏழைகளுக்கு எதிரான நடவடிக்கை:

ராகுல் மேலும் பேசும்போது "பிரதமர் நரேந்திர மோடியின் இந்த நடவடிக்கை ஏழை மக்களுக்கு எதிரானது. நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துள்ளது. அதனாலேயே பிரதமர் இவ்விவகாரத்தில் பதிலளிக்கும் நெருக்கடி இருக்கிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக இத்தகையை முடிவை எடுத்துள்ள பிரதமர் அவையில் பதிலளிக்காமல் தப்பியோடிக்கொண்டே இருக்க முடியாது" என்றார்.

இசை நிகழ்ச்சிக்கு போக முடிகிறதே?

"பிரதமர் நரேந்திர மோடியால் பாப் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடிகிறது, பொதுக்கூட்டங்களில் பேச முடிகிறது. ஆனால், நாடாளுமன்றத்துக்கு வரமுடியவில்லை. நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக அரசும், கருவூல அமர்வும் அவை நடவடிக்கைகளை தடை செய்கிறது. போலித்தனமான பேச்சுகளை விடுத்து அவையில் அவர் பேச வேண்டும், நாங்கள் பேசவும் அனுமதிக்க வேண்டும்" என்று ராகுல் கூறினார்.

ராகுல் காந்தி செய்தியாளர் களை சந்தித்தபோது, திரிணமூல் காங்கிரஸின் சுதிப் பண்ட்யோ பாத்யாய, தேசியவாத காங்கிர ஸின் தாரிக் அன்வர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.கருணா கரன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

மக்களவையில் எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்தை முன்வைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க மறுப்பதாக அவர்களும் குற்றம் சாட்டினர். பண மதிப்பு நீக்க நட வடிக்கையில் மத்திய அரசுக்கு எதிராக, 16 கட்சிகளும் ஓரணியில் திரண்டு, விவாதம் கோருவதாக வும், அரசு அதற்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும் கருணாகரன் கூறினார்.

முன்னதாக 16 எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான குலாம் நபி ஆசாத்தின் அறையில் நேற்று ஒன்று கூடி பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து விவாதித்தனர். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவை பதவி யில் இருந்து நீக்கும் வரை போராடவும் முடிவு செய்துள்ளனர்.

ராகுலின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்தகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அனந்த குமார், “இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ராகுல் முன்வைத்திருப்பது, விரக்தியின் வெளிப்பாடாகவே தெரிகிறது. இதற்காக நாட்டு மக்களிடம் ராகுல் மன்னிப்பு கோர வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x